சென்னை
வளைகாப்பு நடத்துவது தொடர்பாக மனைவியுடன் தகராறு: கல்லூரி பேராசிரியர் தற்கொலை - திருமணமான 6 மாதத்தில் சோகம்
|வளைகாப்பு நடத்துவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் திருமணமான 6 மாதத்தில் கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பாடி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சந்தீப்குமார் (வயது 32). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த டிசம்பர் மாதம் மீனாட்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மீனாட்சி தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.
தற்போது மீனாட்சி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வளைகாப்பு நடத்துவது தொடர்பாக கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. பின்னர் மீனாட்சி தூங்கி விட்டார்.
இதனால் விரக்தி அடைந்த சந்தீப்குமார், மனைவியை படுக்கை அறைக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, வீட்டின் ஹாலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலையில் எழுந்த மீனாட்சி, படுக்கை அறை கதவு வெளிப்புறமாக பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உறவினருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்தபோதுதான் சந்தீப்குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் படுக்கை அறை கதவை திறந்து மீனாட்சியை விடுவித்தனர்.
இது குறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.