சென்னை
போதையில் இளம்பெண்ணிடம் தகராறு: மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு அடி-உதை
|போதையில் இளம்பெண்ணிடம் தகராறு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியை பொது மக்கள் அடித்து உதைத்தனர்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள லூப் சாலையில் நேற்று முன்தினம் இரவு தான் வளர்க்கும் நாயை கையில் பிடித்தபடி பெண் ஒருவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அந்த பெண் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
அவர் நடைபயிற்சி செல்லும்போது, எதிரில் கடுமையான போதையில் தள்ளாடியபடி ஒரு நபர் வந்தார். அவர், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார். ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.
இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து போதை ஆசாமியை அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். போதை ஆசாமி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலைபார்ப்பது தெரியவந்தது.
கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் அவர் குடும்பத்துடன் வசிக்கிறார். பொதுமக்கள் தாக்கியதில் அவர் காயமடைந்ததால், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆனால் அவர் நடத்தை குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.