மது குடிக்க பணம் கேட்டு கணவர் தகராறு: விரக்தியில் 3 மகள்களுடன் தாய் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
|விஷம் குடித்த 4 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புத்தகரம் மதுரா சீனங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 40). கூலி தொழிலாளியான இவருக்கு ராஜேஸ்வரி (33) என்ற மனைவியும், சரண்யா (18), புனிதா (16), கோபிகா (13) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். சரண்யா திருவண்ணாமலையில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் படிப்பு படித்து வருகிறார். புனிதா 12-ம் வகுப்பும், கோபிகா 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். வேடியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வேடியப்பன் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார். கணவர் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் மனமுடைந்த ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த பூச்சிமருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது 3 மகள்களும் பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கினர். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த மனைவி மற்றும் அவரது 3 மகள்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.