< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தி.மு.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 1:00 AM IST

அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் விழாவை ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழு புறக்கணித்தது. இதற்கிடையில் தி.மு.க.வினருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர், சப்-கலெக்டர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைப்பது வழக்கம். இந்த முறை அமைச்சர், உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதற்கிடையில் தி.மு.க. நிர்வாகிகள், ஆழியாறு நீர்தேக்க திட்டக்குழுவினர், பாசன சங்க விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பு விழாவிற்கு வந்திருந்தனர். முதலில் பொள்ளாச்சி கால்வாயில் தண்ணீர் திறக்க சென்றனர்.

அப்போது திட்டக்குழு தலைவர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருக்கும் போது தி.மு.க.வினர் வேண்டும் என்று வேறு ஒருவரை தண்ணீர் திறக்க வைப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் திட்டக்குழு தலைவர், புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க விவசாயிகள் விழாவில் கலந்துகொள்ளாமல் அணையின் மேல் பகுதியில் நின்றனர். பின்னர் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் தண்ணீர் திறக்க செல்லும் போது, திட்டக்குழுவினர், பாசன சங்கத்தினர் விழாவில் கலந்துகொள்ளவில்லை என்றனர். இதுதொடர்பாக திட்டக்குழு தலைவருக்கும், தி.மு.க.வினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திட்டக்குழு தலைவர் செந்தில் கூறியதாவது:-

மழை பொய்த்து போனதால் கடும் வறட்சியிலும் பாசனத்திற்கு விவசாயிகள் போராடி 30 நாட்கள் தண்ணீர் பெற்றோம். ஆனால் தற்போது திட்டக்குழு, பாசன சபை தலைவர்களை புறக்கணித்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கட்சி பதவியை வைத்துக் கொண்டு விவசாயிகளிடையே பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாது. தண்ணீர் திறப்பு குறித்த அரசின் ஆணையை மதிக்கிறோம். அதற்கு எந்த இடையூறும் செய்யவில்லை. அதே நேரத்தில் ஆளும் கட்சி தலையீடு காரணமாக தண்ணீர் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து உள்ளோம். பாசன வினியோகத்தை அதிகாரிகளே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்து உள்ளோம். அடுத்தக்கட்டமாக சப்-கலெக்டரிடம் மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்