சவாரி ஏற்றுவதில் தகராறு - ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த சக டிரைவர்கள்
|சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த சக ஆட்டோ டிரைவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் எம்.கே.நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களை நேதாஜி சாலை ஜான்சி ராணி பூங்கா ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு அழைத்து செல்வது இவரது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் பக்தர்களை போட்டி போட்டுக்கொண்டு சவாரி ஏற்றுவது தொடர்பாக சக ஆட்டோ டிரைவர்களான நாகராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே நாகராஜ் மற்றும் பிரகாஷ் இருவரும் மணிகண்டனை செங்கலால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஆட்டோ டிரைவர்கள் நாகராஜ் மற்றும் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சவாரிக்காக பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.