சென்னை
வாகனம் நிறுத்துவதில் தகராறு: ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு..!
|வடபழனியில் ஆட்டோ டிரைவரை வெட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 35) ஆட்டோ டிரைவர். வடபழனி பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டான்டில் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் ஆட்டோ டிரைவர் பரணி என்பவருக்கும் ஆட்டோ நிறுத்துவதில் ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பரணி தனது நண்பர்களை வரவழைத்து சேகரை சரமாரியாக தாக்கினார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேகரை வெட்டிய கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் தலையில் வெட்டுபட்டு பலத்த காயமடைந்த சேகர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார் கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் பரணி மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.