சென்னை
வாடகை வீட்டில் வாகனங்களை நிறுத்துவதில் தகராறு: ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை
|செம்மஞ்சேரியில் வாடகை வீட்டில் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 6-வது நிழற்சாலையில் வசித்து வந்தவர் பாலு (வயது 50). ஆட்டோ டிரைவர். இவரது வீட்டின் அருகில் கார் டிரைவர் தணிகைவேலு (38) என்பவர் வசித்து வருகிறார். கீழ் மற்றும் மாடி வீட்டில் இருவரும் வாடகைக்கு வசித்து வந்தனர். இருவரும் தங்களது வாகனங்களை கீழ் பகுதியில் நிறுத்துவதில் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடித்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் கார் டிரைவர் தணிகைவேலு ஆட்டோ டிரைவர் பாலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பாகி படிக்கட்டில் உருண்டபடி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் சுதாரித்து கொண்ட கார் டிரைவர் தணிகைவேலு இரும்பு கம்பியால் ஆட்டோ டிரைவர் பாலுவின் தலையில் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் ஆட்டோ டிரைவர் இருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆட்டோ டிரைவர் பாலுவை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கார் டிரைவர் தணிகைவேலுவை கைது செய்த செம்மஞ்சேரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.