மதுபோதையில் தகராறு: தட்டிக்கேட்ட மனைவியின் சித்தப்பா தலையில் உரலை போட்டு கொன்ற கொடூரம் - இளைஞர் கைது
|மயிலாடுதுறை அருகே மதுபோதையில் மனைவியின் சித்தப்பாவின் தலையில் இளைஞர் உரலை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே கோபித்துக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பி வராத ஆத்திரத்தில் மனைவியின் சித்தப்பாவின் தலையில் இளைஞர் உரலை போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பர்மா காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு குடும்பத்தில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், பிரபாகரின் மனைவி மாலதி கோபித்துக் கொண்டு அவரின் தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் மாமியாரின் வீட்டிற்கு சென்ற பிரபாகர், அங்கேயே 10 நாட்கள் தங்கிய நிலையில், சம்பவத்தன்று மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு மாலதி மறுப்பு தெரிவித்த நிலையில், கடும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதை, மாலதியின் சித்தப்பாவான 70 வயது முதியவர் பாக்கியம் என்பவர் தட்டிக்கேட்ட நிலையில், அவரின் தலையில் கல் உரலை போட்டு பிரபாகரன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில், பிரபாகரனை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அப்பகுதியை சேர்ந்த தவமணி என்பவரே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த நான்கு ஆண்டுகளாக தவமணி என்பவர், காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக பாண்டி சாராயத்தை வாங்கி வந்து விற்பதாகவும், அதை குடித்து விட்டு தான் பிரபாகர் கொலை செய்ததாகவும் தெரிவித்த பொதுமக்கள், போலீசார் முன்னிலையில் சில பாண்டி சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி தீயிட்டு அழித்தனர்.