சென்னை
கடற்கரையில் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை
|திருவொற்றியூர் கடற்கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருவொற்றியூர் கடற்கரை சாலையில் நேற்று நண்பர்கள் சுமார் 10 பேர் ஒன்று கூடி மது அருந்தினர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே 4 பேர் தனியாக பிரிந்து திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரையில், கரையோரம் நிறுத்தி இருந்த படகில் படுத்து இருந்தனர்.
அவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மற்ற 6 பேர் கிராஸ் ரோடு அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று குடித்துவிட்டு மீண்டும் கத்தி மற்றும் அரிவாளுடன் திருச்சினாங்குப்பம் கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு கடற்கரையில் படுத்திருந்த வியாசர்பாடியை சேர்ந்த சஞ்சய் என்ற மிட்டா பாய் (வயது 23) என்ற வாலிபரை 6 பேரும் சேர்ந்து சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கடற்கரையை ஒட்டி உள்ள தெருவில் சஞ்சய் ஓடினார்.
ஆனால் அவர்கள், சஞ்சையை விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சஞ்சயை, உடனிருந்த நண்பர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.