மதுபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் - சென்னையில் பயங்கரம்
|மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மாதவரத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், மாமியாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர் புஷ்பராஜ். இவரது மனைவி ஜான்சி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் (65 வயது) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குடிப்பழக்கம் காரணமாக புஷ்பராஜ், வேலைக்கு செல்லாமல் இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்ததால் புஷ்பராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாமியார் வசந்தி தங்களுடன் வசிப்பதால் தான் பிரச்சினை வருகிறது என்று எண்ணிய புஷ்பராஜ், மனைவி வெளியே சென்றதும் மதுபோதையில் தனது மாமியார் வசந்தியிடம் தகராறு செய்ததுடன், ஆத்திரத்தில் அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார், தலைமறைவாக இருந்த புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.