< Back
மாநில செய்திகள்
மதுபாட்டில் கேட்டதால் தகராறு: ரவுடி அடித்துக்கொலை - 5 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

மதுபாட்டில் கேட்டதால் தகராறு: ரவுடி அடித்துக்கொலை - 5 பேர் கைது

தினத்தந்தி
|
21 July 2022 11:28 AM IST

மதுபாட்டில் கேட்டதால் தகராறு: ரவுடி அடித்துக்கொலை - 5 பேர் கைது செய்தனர்.

எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 44). ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. இவருடைய மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நேற்று காலை கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ் எண்ணூர் அனல்மின் நிலைய மைதானம் நுழைவுவாயில் முன்பு சரவணன், தலை நசுங்கிய நிலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த எண்ணூர் போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த ரகு (26) என்பவரிடம் மதுபாட்டில் கேட்டார். அதற்கு ரகு, மதுபாட்டில் இல்லை என்று கூறியதால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ரகு, சிறிது நேரம் கழித்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரவணனிடம், "மது பாட்டில் கிடைத்துவிட்டது. மது குடிக்கலாம் வா" என்று கூறி காரில் அழைத்துச் சென்றார்.

கத்திவாக்கம் மேம்பாலம் அருகே சென்றவுடன் அனைவரும் சேர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கு ஏறியதும் இரும்பு ராடு மற்றும் பாராங்கற்களை கொண்டு சரவணனின் தலையில் சரமாரியாக அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது.

இதையடுத்து எண்ணூர் போலீசார் ரகு, கோபிநாத் (23), அரவிந்த் (31), சதிஷ் குமார் (20), பாலகிருஷ்ணன் (35) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்னர்.

மேலும் செய்திகள்