< Back
மாநில செய்திகள்
பழங்கள்  விற்பதில் வியாபாரிகளுக்கிடையே வாக்குவாதம்
கடலூர்
மாநில செய்திகள்

பழங்கள் விற்பதில் வியாபாரிகளுக்கிடையே வாக்குவாதம்

தினத்தந்தி
|
24 Jan 2023 7:06 PM GMT

கடலூர் உழவர் சந்தையில் பழங்கள் விற்பதில் வியாபாரிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் புதுப்பிக்கப்பட்ட உழவர் சந்தை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. இதில் 150 கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் விளை பொருட்களை உழவர் சந்தைக்குள் வைத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், சில வியாபாரிகள் உழவர் சந்தை முன்பு சாலையோரம் பழங்கள் மற்றும் காய்கறிகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்களையும் உழவர் சந்தைக்குள் சுற்றுச்சுவர் ஓரமாக தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில், அவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சுவர் ஓரமாக பழங்கள் வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு அதிகளவு விற்பனையானதால், நேற்று காலை சில வியாபாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் வியாபாரம் செய்யாமல், ஏற்கனவே தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் அருகில் பழங்களை வைத்து வியாபாரம் செய்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த வேளாண்மை அலுவலர் மகாதேவன், இருதரப்பை சேர்ந்த வியாபாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் வியாபாரிகள் உடன்படவில்லை.

போலீசார் அறிவுறுத்தல்

இதுபற்றி அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து, பழ வியாபாரிகளிடம் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் ஒரு வியாபாரியை தவிர மற்றவர்கள் அனைவரும் போலீசார் அறிவுறுத்தலின் பேரில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பழங்களை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கினர். தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வியாபாரி மீது, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை அலுவலர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்