திருவள்ளூர்
குடிப்பழக்கத்தால் தம்பதி இடையே தகராறு: புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை காதல் திருமணம் முடிந்த 13 நாட்களில் விபரீத முடிவு
|கணவர் குடிப்பழக்கத்தால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு தாலுகா ராம சமுத்திரம் ஊராட்சியில் உள்ள வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 25). இவர் பொக்லைன் எந்திரம் ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அனு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. முத்துவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் தினசரி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனு குடிப்பழக்கத்தை விடும்படி முத்துவிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்து வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட அனு கணவரிடம் தட்டிக்கேட்டு தகராறு செய்தார
இதனால் மனவேதனை அடைந்த அனு படுக்கை அறைக்கு சென்ற நிலையில் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டார் அனுவை கீழே இறக்கி உடனடியாக சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அணுவின் தந்தை ராஜேந்திரன் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் முடிந்து சில நாட்களே ஆவதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் 13 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.