சென்னை
வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
|வடசென்னை பகுதிகளில் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, சென்னை, அண்ணாநகர் மேற்கு, 100 அடி பிரதான சாலையில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் நகரும் மின்படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்படுவது தொடர்பாகவும், சென்னை, ஷெனாய் நகரில், 4.5 ஏக்கரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை, ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள 1.5 கி.மீ. நீளமுள்ள புலியூர் கால்வாய் கரைகளை ரூ.5 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்துவது தொடர்பாகவும் அந்தந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
2023-24-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை மற்றும் கடற்கரையை தூய்மைப்படுத்துகின்ற பணிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த அறிவிப்புகளையும் களத்திற்குச் சென்று ஆய்வு செய்யும் நோக்கில், 14 சட்டமன்ற தொகுதிகளில் 19 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 இடங்களிலும் வெகுவிரைவில் கள ஆய்வு மேற்கொண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பணிகளை தொடங்கி, வேகமாக முன்னெடுக்கும் செயலில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், 3 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வடசென்னைப் பகுதியை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கிறார். அந்த வகையில் சென்னைப் பெருநகரத்தினுடைய அளப்பரியாப் பணிக்காக தினந்தோறும் ஒரு பகுதியில் கள ஆய்வு செய்து, அப்பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, இந்த மேம்பாட்டுப் பணிகளை துரிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ.க்கள் அ.வெற்றியழகன், எம்.கே.மோகன், டாக்டர் நா.எழிலன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பின் படி 'சென்னை, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோவிலுடன் இணைந்த திருவள்ளுவர் கோவிலுக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்" என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் திருப்பணிகள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி வரைபடம் மற்றும் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.