கிராம சபை கூட்டங்களை போல நகர உள்ளாட்சி மன்றங்களில் பகுதிசபை கூட்டங்கள்
|கிராம சபை கூட்டங்களை போல நகர உள்ளாட்சி மன்றங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த கூட்டங்களை சென்னை பம்மலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
மக்களின் அடிப்படை தேவைகளை நேரில் சென்று கவனித்து அவற்றை நிறைவேற்றித் தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து அவை முழு அளவில் செயல்பட்டு வருகின்றன.
மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு கிராம சபைக் கூட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குடிநீர் வினியோகம், குடிநீர் குழாய் இணைப்பு, கட்டிடம் கட்டுவது, விதி மீறிய கட்டிடங்கள், தொற்று நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டங்களில் எடுத்துரைத்து நிவாரணம் பெறலாம்.
குடியரசு தினம் ஜனவரி 26-ந்தேதி, உழைப்பாளர் தினம் மே 1-ந்தேதி, சுதந்திர தினம் ஆகஸ்டு 15-ந்தேதி, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2-ந்தேதி ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என அனைவருமே இதில் பங்கேற்கலாம். கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம சபை கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.
'வார்டு கமிட்டி, ஏரியா சபா'
இந்த நிலையில் கிராம சபை கூட்டம் போல நகர உள்ளாட்சிகளிலும் மக்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே 2010-ம் ஆண்டில் அரசு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 24-ந்தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒவ்வொரு உள்ளாட்சி மன்றமும் வார்டு கமிட்டி என்ற குழுவை ஒவ்வொரு வார்டுக்கும் அமைத்துக்கொள்ள முடியும். அந்த வார்டின் கவுன்சிலரையே தலைவராக வார்டு கமிட்டிக்கு நியமிக்க வேண்டும்.
அதுபோலவே வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் பகுதி சபை என்ற 'ஏரியா சபா'வையும் (கிராமசபை போல) உள்ளாட்சி மன்றம் நிறுவிக்கொள்ளலாம். அந்த வார்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், அந்த ஏரியா சபையின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்கள்.
செயலாளர்கள் நியமனம்
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி, வார்டு கமிட்டிக்கும், பகுதி சபைக்கும் தனித்தனியாக செயலாளர்களை அரசு நியமிக்கும். இந்த செயலாளர்கள், வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபையில் கூட்டம் நடக்கும் இடம், தேதி, நேரம் ஆகியவற்றை அறிவிப்பார்கள். அந்த கூட்டத்தில் பேசப்பட வேண்டிய அரசு திட்டங்கள், மேம்பாட்டு பணிகள், அந்த வார்டில் உள்ள பயனாளிகள் ஆகியவற்றின் பட்டியலை சமர்ப்பிப்பார். மேலும் செயலாளர், அந்த வார்டில் நகராட்சி வரி செலுத்தாதவர்களின் பட்டியலை தகவலுக்காக சமர்ப்பிப்பார்.
உள்ளாட்சி தினத்திலும்.....
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகத்தில் குடியரசுதினம், மேதினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் 12 ஆயிரத்து 525 கிராமங்களிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சி தினத்திலும் கிராமசபை கூட்டத்தை நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்மைத்துறை, உணவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் அந்தந்த கூட்டங்களில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளில் கிராமசபை கூட்டத்தைப்போல், நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை கூட்டங்களை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகள் தோறும், வார்டு கவுன்சிலர் தலைமையில் ஒரு குழுவை உள்ளாட்சி மன்றங்கள் அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கான உறுப்பினர்களையும் மன்றங்களே தேர்வு செய்ய வேண்டும். இதுதவிர, அந்த வார்டில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பகுதி சபையை உருவாக்க வேண்டும். இவற்றுக்கும் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரே தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடங்கி வைக்கிறார்
தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் கவுன்சிலர்களுக்கு வார்டில் உள்ள பிரச்சினைகள், குறைகளை தெரிவிக்க 9 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வார்டுகளில் பகுதி சபை கூட்டங்கள் வரும் நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சி தினத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பம்மலில் உள்ள 6-ம் வார்டில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்குள்ள திறந்தவெளி அரங்கில் வார்டு மக்களின் குறைகளை அவர் கேட்டு அவற்றுக்கு தீர்வு காணும்படி உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது.
பம்மலில் முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் பகுதி சபை கூட்டம் நடைபெறும் இடத்தை, அமைச்சர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, துணைமேயர் காமராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.