< Back
மாநில செய்திகள்
நீங்கள் நலமா திட்டம் என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம்: ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

'நீங்கள் நலமா' திட்டம் என்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமம்: ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
7 March 2024 8:04 PM IST

வருகின்ற தேர்தலில் தி.மு.க. அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"தி.மு.க. அரசின் கடந்த மூன்றாண்டு கால ஆட்சி என்பது சோதனைகளின் மொத்த உருவமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, வாகன வரி உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு என பல கூடுதல் சுமைகளை மக்கள்மீது தி.மு.க. அரசு திணித்துக் கொண்டிருக்கிறது. இது போதாது என்று விலைவாசி உயர்வு விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சுமைகளை எல்லாம் சுமந்து கொண்டு மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கட்டணம் ரத்து, நீட் தேர்வு ரத்து, எரிவாயு மானியம், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்ட முக்கியமான மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் நிம்மதியாக வாழ்வது போலவும், விலைவாசி குறைந்துள்ளது போலவும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது போலவும், கடன் சுமைகள் குறைக்கப்பட்டது போலவும் நினைத்துக் கொண்டு 'நீங்கள் நலமா' திட்டத்தை தி.மு.க. அரசு அறிவித்திருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் 'நீங்கள் நலமா' திட்டத்தை ஆரம்பித்து இருப்பது மக்களின் சோதனைகளை, வேதனைகளை மறைக்க முயற்சிக்கும் செயல் ஆகும். மீண்டும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டுள்ளது. வருகின்ற தேர்தலில் தி.மு.க. அரசிற்கு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்