சென்னை
எல்லா பயன்களும் உங்களுக்கு கிடைக்கிறதா? மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி சந்திப்பு
|மத்திய அரசு திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லா பயன்களும் உங்களுக்கு கிடைக்கிறதா? என கேட்டறிந்தார்.
சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி 2-வது நாளான நேற்று மாலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், மத்திய அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை சந்தித்து பேசினார். அப்போது தமிழக பா.ஜ.க. மாநில தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், மாவட்ட தலைவர்கள் சாய் சத்யன், காளிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சி.ராஜா உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்
பயனாளிகள் முன்பு மத்திய மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-
மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தேசத்தில் உள்ள அனைவரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வசிப்பதற்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகத்தில் மட்டும் 56 லட்சம் கழிப்பறைகளை கட்டிக் ொடுத்துள்ளார்.
பிரதமராக மோடி பதவியேற்றபோது 18 ஆயிரம் கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. மின் கம்பங்கள் கொண்டு செல்ல முடியாத மலைப்பாங்கான இடங்களுக்கு கூட 50 ஹெலிகாப்டர்கள் மூலம் மின்கம்பங்களை கொண்டு சென்று மின்சார வசதியை ஏற்படுத்தி கொடுத்தார்.
இத்தனை வசதிகள் மக்களுக்கு கிடைத்தாலும் அன்றாடம் உணவுக்கு தேவையான அரிசி வேண்டும் என்பதை உணர்ந்து நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு வெளிச்சந்தையில் 28 அல்லது 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அரிசியை 3 ரூபாய்க்கு வழங்கினார்.
இது மட்டுமன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் இவற்றை தமிழக அரசு தாங்களே வழங்குவதுபோல் மக்களிடம் கொண்டு செல்கிறது.
வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். பிரதமர் மோடி தற்போது அதனை ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் தொகையை அதிகரித்து உள்ளார். அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்கும் 'ஜல் சக்தி' திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு வந்து கிடைக்கிறதா?
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை மையத்தில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர், சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவதால், சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், அங்குள்ள வசதிகளை அதிகரிக்கவும் தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். பழமை வாய்ந்த கோவில்களை புதுப்பிக்க மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை வழங்கி வருகிறது. அவற்றை பயன்படுத்தி கோவில்களை நல்ல முறையில் வசதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர், தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க. வட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.