சென்னை
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம்விடப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
|வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் விரைவில் ஏலம்விடவேண்டும் பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.
தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.
புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.
கவலை இல்லை
இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.
அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.
வாகனங்கள் ஏலம்
இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கீழே காண்போம்.
அபராதம் செலுத்த காலநிர்ணயம்
இதுபற்றி அம்பத்தூரைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்க தலைவர் எஸ்.சுரேஷ் கூறும்போது, 'போலீசாரால் வழக்குகள் தொடர்பாக பிடிக்கப்படும் வாகனங்களுக்கு அபராதம் செலுத்த ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கி, உடனடியாக செலுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல அறிவுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஏலம் போட்டு அரசுக்கு வருவாயை பெருக்கலாம். உடனடியாக ஏலம் போடும்போது அதனை வாகனமாக பார்த்து வாங்குவார்கள். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏலம் போடுவதாக இருந்தால் அவற்றை இரும்பு எடைக்குத்தான் கேட்பார்கள். இதனால் யாருக்கும் லாபம் இல்லை. சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுவதுடன், தேவையில்லாமல் இடத்தையும் இந்த வாகனங்கள் அடைத்து கொள்கின்றன. வரும் காலத்தில் பழைய வாகனங்களை சேமிக்காமல் உடனுக்குடன் பைசல் செய்துவிட வேண்டும்' என்றார்.
பயனடைவார்கள்
என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த டயர் கடை உரிமையாளர் மகாலிங்கம் கூறும்போது, 'பழைய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பழைய கார், ஜீப் போன்ற வாகனங்களை குவியலாக போடுவதற்கு பதிலாக அதனை முறையாக உரிய காலத்தில் மொத்த வியாபாரிகளிடம் ஏலத்திற்கு விடலாம். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும், அரசு அலுவலகங்களும் சுத்தமாக இருக்கும். இதுபோன்ற வாகனங்களை விற்பனை செய்வதால் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து புதிய வாகனங்களை வாங்க முடியாதவர்கள் இதனை வாங்கி பயனடைவார்கள். ஆண்டு கணக்கில் பழுதாகி கிடக்கும் வாகனங்களை உரிய வகையில் அழிப்பதன் மூலம் அதில் உள்ள இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் போன்றவற்றை மீட்டெடுக்க முடியும்' என்றார்.
அழிக்கும் தொழில்நுட்பம்
மயிலாப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான பு.தங்கமணி கூறும்போது, ''சாலைகளில் உரிமை கோராத வாகனங்களை மறு சுழற்சி செய்வதற்குரிய தொழில்நுட்பம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. வாகன புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் பயன்பாட்டில் இல்லாத வாகனங்களைப் பற்றி எவரும் கண்டுகொள்வதில்லை. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே சூழல் கேடுக்கு காரணமாக அமைகின்றன. வாகனங்களின் ஆயுள் காலத்துக்குப் பிறகு அவற்றை முறைப்படி அழிக்கும் தொழில்நுட்பம் உரிய வகையில் செயல்படுத்தப்படவில்லை. இதுபோன்ற வாகனங்களை சேகரிப்பது, அவற்றின் பாகங்களைப் பிரித்து உரிய வகையில் அழிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் இவற்றால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறையும்'' என்றார்.
மண்வளம் பாதிக்கும்
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.செல்வி கூறும்போது, ''சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களில் பெரும்பாலானவற்றில் பேட்டரிகள் அப்படியே இருக்கின்றன. இவற்றின் டயர், டியூப்புகளும் உள்ளன. பேட்டரியில் திராவக கசிவு, டயரில் காற்று இறங்கி மண்ணில் புதைவதால் மண் வளம் பாதிக்கப்படுவதோடு, நீர்வளமும் கெடுகிறது. வாகனங்களின் பெயிண்ட் கரைவது, துருப்பிடிப்பது இவை அனைத்தும் மண்ணில் சேர்வதால் மண் வளம் சீர்கெடுகிறது. இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்கள் மண்ணின் வளத்தையும், நீராதாரத்தையும் வெகுவாக பாதிக்கிறது. இத்தகைய வாகனங்கள் மனித வாழ்க்கைக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். 2030-ம் ஆண்டுக்குள் பேட்டரி வாகனங்களை பெருமளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்து வருகிறது. அதற்கு முன்பாக இதுபோன்ற கைவிடப்பட்ட வாகனங்களை உரிய வகையில் அழித்தாலே பெருமளவு மண்வளமும், நீர் ஆதாரமும் காக்கப்படும். அதேபோல், ஒவ்வொரு வாகனத்திலும் என்ஜின் எண் மற்றும் 'சேசிஸ்' எண்களைக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் உதவியுடன் வாகனங்களின் உரிய உரிமையாளர்களை கண்டறிந்து கோர்ட்டு உத்தரவுடன் உரியவர்களிடம் சேர்ப்பிக்க போலீசார் முயல வேண்டும்'' என்றார்.
ரூ.1.40 கோடி வருவாய்
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-
சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமை கோராதவற்றை 4 வகைகளாக பிரிக்கிறோம். இதில் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் விடுவிக்கிறோம். ஏனைய வாகனங்களை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரின் அனுமதி பெற்று, குற்றவியல் நடைமுறை சட்டம் 102 பிரிவின் கீழ் ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு 527 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் ரூ.1 கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 941 வருவாய் கிடைத்தது.
சமீப காலமாகவே மதுவிலக்கு தொடர்பான குற்றங்கள் சென்னையில் பெருமளவு இல்லாததால் வாகனங்கள் பறிமுதல் என்பது இல்லை. ஒரு சில வழக்குகளில் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் வழக்கு முடிவடைந்ததும், கோர்ட்டு அனுமதி பெற்று வாகனங்களை திரும்ப எடுத்து செல்கின்றனர். எதிர்காலத்தில் முறையாக பழைய வாகனங்கள் உரிய காலத்தில் ஏலம் விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் போலீஸ் நிலையங்களிலும் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குப்பை போல் போடாமல் வாகனங்களில் வழக்கு விவரங்கள் அந்தந்த வாகனங்களில் எழுதப்பட்டு வரிசையாக அடுக்கி முறையாக பாதுகாக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது போலீஸ் நிலையங்களில் முறையாக பழைய வாகனங்கள் குப்பை போல் போடாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.
சென்னை மாநகரை பொறுத்த வரையில் இதற்கு முன்பு பழைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.1 கோடி வரையிலான நிதி மூலம் மாநகரில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கி பொருத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.