< Back
மாநில செய்திகள்
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?
அரியலூர்
மாநில செய்திகள்

வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

தினத்தந்தி
|
29 Jan 2023 12:30 AM IST

தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.

கவலை இல்லை

புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி, கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும். இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத்தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.

அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்பட செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத்தோன்றுகிறது.

வாகனங்கள் ஏலம்

இதுகுறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்க துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து பார்போம்:-

அபராதம் விதிக்கலாம்

அரியலூரை சேர்ந்த கணேஷ்:- தற்போது அனைத்து வீடுகளிலும் இருசக்கர வாகனங்கள் அல்லது கார், ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை கண்டிப்பாக வைத்துள்ளனர். சிலர் அவசர தேவைக்காக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது அவர்களை போலீசார் மடக்கி பிடிக்கிறார்கள். இதேபோல் மது அருந்திவிட்டு செல்லும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கிறார்கள். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அதன் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதால் அந்த வாகனங்கள் பல மாதங்கள் வெயிலில் நின்று வீணாகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சில மாதங்களில் வாகனத்தின் உரிமையாளர்களிடமே குறைந்தபட்ச அபராத தொகையை பெற்றுக் கொண்டு அதனை கொடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் மாசு

விக்கிரமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவா:- சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை பல ஆண்டுகள் வரை வாகனங்கள் மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகிறது. இதனால் யாருக்கும் லாபம் இல்லை. மேலும், சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுவதுடன், தேவையில்லாமல் இடத்தையும் இந்த வாகனங்கள் அடைத்து கொள்கின்றன. எனவே வரும் காலத்தில் பழைய வாகனங்களை சேமிக்காமல் உடனுக்குடன் பைசல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்ற வழக்குகள்

ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வக்கீல் முருகன்:- ஜெயங்கொண்டம் சரகத்திற்குட்பட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. இவைகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விட்டு அப்புறப்படுத்த வேண்டும். இதன்மூலம் கிடைக்கப்பெறும் தொகை அரசுக்கு உதவியாக இருக்கும். ஆனால் அந்த வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து வீணாகுவதால் யாருக்கும் எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. எனவே இது போன்ற வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அதனை உடனடியாக ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுக்கு வருவாய் கிடைக்கும்

உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்:- சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக மழை, வெயிலில் நின்று உருக்குலைந்து யாருக்கும் பயனில்லாமல் போகிறது. எனவே அதனை மொத்த வியாபாரிகளிடம் ஏலத்திற்கு விடலாம். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும், அரசு அலுவலகங்களும் சுத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்