பெரம்பலூர்
வழக்குகளில் பிடிபட்டு துருப்பிடித்த நிலையில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?
|தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.
கவலை இல்லை
புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி, கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும். இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத்தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.
அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்பட செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத்தோன்றுகிறது.
வாகனங்கள் ஏலம்
இதுகுறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்க துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்களா? மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து பார்போம்:-
கோர்ட்டு உத்தரவு
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன்:- மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள், ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை காணலாம். அதனை ஏன் உடனடியாக ஏலத்தில் விட வேண்டியது தானே என்று பொதுமக்கள் தரப்பில் கேள்விகள் எழலாம். குற்ற வழக்குகளில கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு நிறைய சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. இதனால் அந்த வாகனங்களை ஏலம் விட முடியாமல் நீண்ட காலமாக நின்று கொண்டிருக்கிறது. மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குகளில் கைப்பற்றப்படும் வாகனங்கள் எளிதில் ஏலத்திற்கு வந்து விடும். குற்ற வழக்குகளில் கைப்பற்றப்படும் வாகனங்களில் உரிமை கோராத வாகனங்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விடலாம். விபத்து வழக்குகளில் கைப்பற்றப்படும் வாகனங்களை, அந்த உரிமையாளர்களில் சிலர் உடனடியாக வாகனங்களை பெற்று செல்கின்றனர். சிலா் அந்த வாகனங்களை செலவு செய்து சரி பார்த்து மீண்டும் இயக்கினால் விபத்து ஏற்படக்கூடும் என்று வாகனங்களை எடுக்க முன்வருவதில்லை. இதனால் அந்த வாகனங்கள் துருப்பிடித்து வீணாக நிற்கிறது. மற்ற குற்ற வழக்குகளில் உள்ள வாகனங்களை கோர்ட்டு உத்தரவு உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி தான் ஏலத்திற்கு கொண்டு வர முடியும்.
காட்சி பொருளாக நிற்கிறது
அரசு அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரிய பழுது காரணமாக நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அந்த வாகனங்களின் பழுதை சரி செய்யப்படுவதில்லை. ஏலத்திற்கும் கொண்டு வரப்படுவதில்லை. சில வாகனங்கள் சிறிய பழுது காரணமாக பயன்படுத்தப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தில் ஏற்பட்ட பழுதினை சரி செய்தாலே மீண்டும் இயக்க முடியும். ஆனால் அந்த நடவடிக்கையை உயர் அதிகாரிகள் எடுப்பதில்லை. இதனால் நல்ல வாகனங்கள் கூட அப்படியே கிடப்பில் போடப்பட்டு, காட்சி பொருளாக நிற்கிறது. அரசு சொத்து கண்கூட வீணாகி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.