< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா?

தினத்தந்தி
|
24 Dec 2022 1:48 AM IST

மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அவசியமா? என கருத்து தொிவித்துள்ளனர்.

கொரோனா நோய்க்கிருமி அழிவே இல்லை என்பது போல் உருமாறிப் பரவி உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

உலகம் ஓலமிட்டது

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அழையா விருந்தாளியாக அனைத்து நாடுகளிலும் ஊடுருவி சமூகப்பரவலாக மாறியது.

உலகமே ஓலமிட்டு அழும் வகையில் அந்தக் கொடிய நோய் தொற்றுக்கு சுமார் 45 லட்சம் பேர் உயிர் இழந்தனர். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டிலும் அதன் பீதி அனைவரையும் தொற்றி இருந்தது.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டன.

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் கொரோனா தொற்று பரவலின் வேகத்துக்கும், வீரியத்துக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. அதனால் நோய் பற்றிய அச்சம் மக்கள் மனதில் மெல்ல, மெல்ல விலகியது. நாளடைவில் கொரோனா வைரசை சாதாரண காய்ச்சல் போன்று மக்கள் கருதத் தொடங்கினர். எனவே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் உதாசீனப்படுத்தப்பட்டன.

புது வடிவம்

கொரோனா கிருமி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமைக்ரான் என புதுப்புது வடிவில் உருமாறி அச்சுறுத்தினாலும் மக்கள் கவலை கொள்வதாக இல்லை.

இந்த நிலையில் கொரோனா கிருமியை உலகிற்கு அறிமுகம் செய்த சீனாவில் 'ஓமைக்ரான் பி.எப்.7' என்ற வடிவில் கொரோனா புதிய உருவம் எடுத்துள்ளது. இந்த நோய்க்கிருமி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் குஜராத், ஓடிசா ஆகிய மாநிலங்களில் ஊடுருவிவிட்டது.

வீரியமான கொரோனா தொற்று போன்று இந்தக் கிருமியும் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உலகச் சுகாதார அமைப்பும் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

அவசர ஆலோசனை

இந்தநிலையில் இந்தியாவில் ஓமைக்ரான் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டிலும் இந்த நோய்க்கிருமி நுழைந்து விடாது தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள், கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது பற்றிய மருத்துவ நிபுணர், பொதுமக்களின் பார்வை வருமாறு:-

மருத்துவ இயக்குனர்

தமிழக அரசின் பொதுச்சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம்:-

கொரோனா தொற்று பற்றி அச்சம் கொள்ளாமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் மக்கள் இருக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஓமைக்ரான் பி.எப்.5 கிருமி பரவியது. அதனை நாம் எளிதில் கடந்து வந்துவிட்டோம்.

தற்போது ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுகிறது. இந்த வைரஸ் கிருமி பரவல் வேகம்தான் அதிகம் இருக்கிறது. பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் 96 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இதன் மூலம் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது.

இதனால் புதிய வகை கொரோனா பரவலை பற்றி யாரும் பயப்படத் தேவையில்லை.

அதேநேரத்தில் இன்னும் கொரோனா கிருமி முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களுக்கு செல்வதை முதியோர்கள் முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேப்போன்று சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது நல்லது.

முகக்கவசம் கொரோனா பரவலில் இருந்து மட்டுமல்ல காற்றில் பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

சிரமத்துடன் வியாபாரிகள்

திருச்சுழியை சேர்ந்த வியாபாரி விஜயராஜன்:- கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்ததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.. தற்போது தான் நிலைமை சீராகி வருகிறது. மீண்டும் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுவதற்கு முன்னதாக மத்திய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி பாதிக்கும்

சிவகாசி கல்லூரி மாணவர் ஷேக்:- கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வர 2 ஆண்டுகள் ஆகி உள்ளது. இப்போது மீண்டும் ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவு வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளை அண்டை நாடுகள் அறிவித்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் ஏற்பட்டு மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டால் பொருளாதாரம் மட்டும் அல்லாமல் கல்வி கற்கும் மாணவர்களும் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள்.

எனவே இந்த கிருமி பரவும் முன் மத்திய, மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் தேர்வு எழுதாமல் முழு தேர்ச்சி அடைந்த மாணவர்கள் பலர் தற்போது மேல் கல்வி படிக்க செல்லும்போது சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளி

ராஜபாளையம் சங்கர்:- ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு வர வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஊரடங்கு வந்தால் மக்களுடைய பொருளாதாரம் மிகவும் பாதிக்கும். ஏற்கனவே கொரோனா காரணமாக பள்ளி குழந்தைகள் கல்வியில் பின்தங்கி மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் வேளையில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும்? என தெரியவில்லை.

உடல் அளவிலும், மனதளவிலும் நமக்கு நாமே நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க தயாராக வேண்டும். எனவே நமது பழைய நிலையை எண்ணி மீண்டும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நாம் அன்றாட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


கொரோனா சிகிச்சை வார்டு தயார்

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி:-

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். ஒருவருக்கு தும்மல் ஏற்படும்போது கொரோனா வைரஸ் 25 கி.மீ. வேகத்தில் பரவக்கூடிய சக்தி கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே உள்ள கொரோனா சிகிச்சை வார்டுகள் தற்போதும் தயார் நிலையில் உள்ளன. தற்போதும் தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோர் பரிசோதனை செய்து கொள்ளலாம். நோய் வருமுன் காப்பது நல்லது என்ற முதுமொழிக்கேற்ப நாம் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.


பரிசோதனை மையம்

கலெக்டர் மேகநாத ரெட்டி:-

ஓமைக்ரான் பி.எப்.7 கிருமி பாதிப்பை தடுக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மேலும் மாவட்டத்தில் யாரேனும் தடுப்பூசி போடாமல் இருந்தாலும் அல்லது 3-வது தடவை தடுப்பூசி போட வேண்டிய நிலை இருந்தாலும் அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் இயங்கி வரும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

மேலும் நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை செய்ய விரும்புபவர்களும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள பரிசோதனை மையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளலாம். அவ்வப்போது பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களும் நோய் பரவல் ஏற்படாமல் இருக்க அரசு அறிவிக்கும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.


கொரோனா பாதிப்பு ஒரு பார்வை...

இந்தியாவில் இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு 5 லட்சத்து 30 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசிகள் வந்த பின்னர் கொரோனா கொட்டம் அடங்கியது.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள், 15-18, 12-14 வயது உள்ளவர்கள் என பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் என 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை 220 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 178 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

21.12.2022 அன்றைய நிலவரப்படி இந்தியாவில் 3 ஆயிரத்து 402 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

தமிழ்நாடு

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 35 லட்சத்து 94 ஆயிரத்து 328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12 கோடியே 74 லட்சத்து 16 ஆயிரத்து 815 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 21.12.2022 அன்று நிலவரப்படி 45 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் செய்திகள்