< Back
மாநில செய்திகள்
புகழிமலை சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படுமா?
கரூர்
மாநில செய்திகள்

புகழிமலை சமணர் படுக்கைகள், கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படுமா?

தினத்தந்தி
|
8 Feb 2023 1:00 AM IST

மாமன்னர் ராஜராஜசோழனுக்கு ஆலோசகராக விளங்கிய சித்தர் கருவூரார் உள்ளிட்டோர் வாழ்ந்த இடம் மற்றும் பிரம்மன் தனது படைப்பு தொழிலை தொடங்கிய இடம் என்பதாலும் ஆன்மிக ரீதியாகவும், பல்வேறு போர்களை கண்டிருப்பதால் வரலாற்று ரீதியாகவும் சிறப்பு வாய்ந்த இடமாக கரூர் திகழ்கிறது.

'வஞ்சி மாநகர்'

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே, 'வஞ்சி மாநகர்' அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன், வஞ்சி மாநகரை தலைநகராக கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே, 'கருவூர்' என்றழைக்கப்பட்டு, 'கரூர்' என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கருவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

சமணர் படுக்கை

வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை சமணர் படுக்கை சமணர்கள் வந்து தங்கி பல்வேறு சேவைகளை செய்துள்ளனர் என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது. மேலும், மன்னர்கள் ஆட்சி செய்த காலம், மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை பற்றிய கல்வெட்டுகள் இங்கு பொறிக்கப்பட்டுள்ளதால் அந்த காலத்தில் அரங்கேறிய நிகழ்வுகளின் தொகுப்பாகவும் அவை திகழ்கின்றன. அந்த வகையில் கரூர் சேரர்களின் தலைநகராக விளங்கியது குறித்தும், சங்ககாலத்தை கணிக்கக்கூடிய ஆதாரமாகவும், சமண முனிவர்களுக்கு மலை குகையில் படுக்கை அமைத்து கொடுக்கப்பட்டது குறித்து புகழிமலையில் உள்ள புகழூர் ஆறுநாட்டார் மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

அந்த மலையில் முருகன் கோவில் உள்ளபோதும் கூட, மேற்புறத்திலுள்ள சமணர் படுக்கைகளை காண வரலாற்று ஆர்வலர்கள் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்து குறிப்புகளை சேகரித்து செல்கின்றனர். அதேபோல் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை வரலாற்று துறை பேராசிரியர்கள் அழைத்து வந்து சமணர் படுக்கையை பார்வையிட்டு அந்த சமணர் படுகை குறித்து விளக்குகின்றனர். வரலாற்றுத் துறை மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

ஆறுநாட்டார் மலை

வரலாற்றை ஆவணப்படுத்த செல்வகடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரர் இரும்பொறை, இளஞ்சேரர் இரும்பொறை உள்ளிட்டோர் ஆட்சி புரிந்தது குறித்தும், கரூரை முக்கிய வணிக தலமாக கொண்டு சேரர்கள் ஆண்டது குறித்தும் கல்வெட்டுகள் ஆவணப்படுத்துகின்றன. இதேபோல் சுக்காலியூர் உள்ளிட்ட இடங்களிலும் சமணர் படுக்கைகள் இருக்கின்றன. ஆனால் அதில் கல்வெட்டு தகவல் கிடைக்கப்பெறவில்லை. புகழூர் ஆறுநாட்டார் மலை கல்வெட்டு, சமணர் படுக்கைகள் குறித்து கரூர் ஜவகர் பஜாரில் உள்ள அகழ் வைப்பகத்தில் புகைப்பட ஆதார தகவல்கள் இருக்கின்றன.

கரூர் மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்கு புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, 'ஆறுநாட்டார் மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

தமிழ் பிராமி எழுத்து

ஆறுநாட்டார்மலை என அழைக்கப்படுகிற அதில் சேரர்களை பற்றிய தகவல்கள் புலப்படுகின்றன. முன்பிருந்த கொங்கு 24 நாடுகளில் மணநாடு, தலையநாடு, தட்டையநாடு, கிழங்கு நாடு, வெங்கலநாடு, வாழவந்தி நாடு ஆகிய ஆறுநாட்டவர்களும் குலதெய்வமாக இந்த மலை மீதுள்ள முருகபெருமான் விளங்கியதால் ஆறுநாட்டார் மலை (புகழிமலை) என பெயர்க்காரணம் வந்ததாக கூறப்படுகிறது.

தமிழ் பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுகள் புகழூர் ஆறுநாட்டார் மலை கல்வெட்டுகள் குறித்தும், கரூரில் வாழ்ந்த சமண முனிவர்கள் தங்குவதற்காக சேர மன்னர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் புகழிமலையினை குடைந்து படுக்கைகள் ஏற்படுத்தியுள்ளனர். தற்போது அங்குள்ள சமணர் படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின்கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், புகழிமலை சமணர் படுக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

புராதன சின்னங்கள்

வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி:- புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் வரலாற்று சின்னங்கள் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. வரலாற்று புத்தகங்களை படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் கூட பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று விடுகின்றனர். இவர்கள் சுவாமியை மட்டுமே பார்க்க வருகின்றனர். மற்ற புராதன சின்னங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே மலையின் மீது உள்ள பழங்காலத்து புராதன சின்னங்கள் குறித்து பெயர் பலகை வைத்து, எந்தெந்த இடத்தில் என்னென்ன புராதன சின்னங்கள் உள்ளன என்றும், அதனுடைய வரலாறு குறித்தும் இந்த மலையில் வைக்க வேண்டும்.

வரலாற்று நூல்

வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார்:- மலையில் உள்ள கல்வெட்டுகளையும், புராதன சின்னங்களையும் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், வரலாற்று சிந்தனையாளர்களுக்கும் தெரியும் வகையில் இந்த மலையின் சிறப்பு குறித்து வரலாற்று நூலை தயாரிக்க வேண்டும். இந்த நூல் படிப்பகங்களில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உள்ளூர் பகுதியில் உள்ள எவருக்கும் இந்த மலையின் சிறப்புகள் பற்றி தெரிவதில்லை. எனவே தொல்லியல் துறை அதிகாரிகள் புகழி மலையின் சிறப்பை வெளிக்கொண்டு வரவேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள்

கண்டியானூர் பகுதியை சேர்ந்த மலர்கொடி:- புகழி மலை அடிவாரத்திற்கு எதிர்புறம் மண்பாண்டங்கள் விற்பனை செய்து வருகிறேன். புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவர்களது ஆசிரியர்களுடன் வந்து இந்த பகுதியில் உள்ள சமணர் படுக்கை மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை பார்வையிட்டு அது குறித்து விளக்கம் கேட்டு செல்கின்றனர். தொல்லியல் துறை அதிகாரிகள் வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அங்கு வருபவர்களுக்கு உரிய விளக்கம் கொடுக்க தொல்லியல் துறை சார்பில் ஒரு நபரை நியமிக்க வேண்டும்.

சுற்றுலா தலம்

வேலாயுதம்பாளையம் நந்தவனம் பகுதியை சேர்ந்த சுரேந்தர்:- புகழிமலை மேல் பல்வேறு வகையான சுவாமிகளும், பல்வேறு புராதன சின்னங்களும், சமணர் படுக்கைகளும் இருப்பது இந்த புகழூருக்கு பெருமை அளிக்கிறது. இந்த மலையில் உள்ள பழங்காலத்து புராதன கல்வெட்டுகளும், புராதன சின்னங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அழிந்து வரும் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் சீரமைக்க வேண்டும். பழங்காலத்து கல்வெட்டுகள், சின்னங்கள் உள்ள புகழிமலையை வரலாற்று சிறப்புமிக்க மலையாக அறிவிக்க வேண்டும். மேலும் சுற்றுலா தலமாகவும் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகழூர் பெயர் காரணம்

சங்க காலத்துக்கு பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். சமணர்களுக்கு புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலிமலை என்று அழைக்கப்பட்டு, புகழிமலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. கரூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து 27 கி.மீ. தூரத்திலும்,. பரமத்தி வேலூரில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் புகழிமலை அமைந்து உள்ளது.

ஆறுநாட்டார் மலையில் 12 கல்வெட்டுகள்

சங்க காலத்தில் சேரமன்னர்கள் கரூரை ஆண்ட போது, சமணர்களை ஆதரித்தனர். தான் இளவரசு பட்டம் பெற்றதின் நினைவாக மூத்த சமண முனிவரான ஆத்தூரை சேர்ந்த செங்காயப்பனுக்கு சேர மன்னர் இளங்கடுங்கோ படுக்கை அமைத்தது குறித்து கல்வெட்டில் புலப்படுகின்றன. சேரர்களின் வரலாற்றை கூறும் பதிற்றுப்பத்து நூல்களில் இவை இடம்பெறுகின்றன. இதுதவிர கரூரில் அந்த காலத்திலேயே தங்க நகை ஆபரணம் செய்யும் தொழில் சிறப்புற நடந்ததை சுட்டி காட்டும் விதமாக, பொன் வியாபாரி நத்தி என்பவர் அமைத்து கொடுத்த சமணர் படுக்கையின் மூலமும், கல்வெட்டிலும் தெரிகின்றன. ஆறுநாட்டார் மலையில் மொத்தம் 12 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள எழுத்துக்கள் பழந்தமிழி என அழைக்கப்படுகிற தமிழ் பிராமி வகை எழுத்து வரிவடிவங்களில் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதனால் இந்த கல்வெட்டின் தொன்மை என்பது மிகுந்த சிறப்புக்குரியதாகும்.

ஹியூகோ வுட் கல்லறை

1848-ம் ஆண்டு கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு ஆங்கிலேய அரசால் ஹியூகோ வுட் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். 150 வயதிற்கு மேல் உள்ள மரங்களை வெட்டுவதற்கு தேர்வு செய்தனர். சுமார் 50 ஆண்டுகள் வரை தேக்கு மரங்களை வெட்டி உள்ளனர். ஆனால், மரங்கள் மறு நடவு செய்யப்படவில்லை.மரங்கள் வெட்டிய பிறகு எந்த பகுதியில் இடம் உள்ளதோ அங்கு ஹியூகோ வுட் விதைகளை தூவினார். வெட்டிய இடங்களில் மீண்டும் மறு நடவு செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். பழங்குடியின மக்களை வேலைவாய்ப்புகளுக்கும், மரங்களை நடுவது போன்ற பணிகளுக்கு முழுக்க, முழுக்க பயன்படுத்தினார். பழைய கரடி பங்களா என்று கூறப்படுகிற மவுண்ட் ஸ்டூவர்ட் பங்களாவில் தங்கி பணிபுரிந்தார். இவரது கல்லறை இருக்கிற தோட்டம் 1916-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அவரது கல்லறையை சுற்றி இவரால் நடப்பட்ட தேக்கு மரங்கள் உள்ளன.தான் வளர்த்த காட்டுக்குள் தனது இறப்பு இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு அப்போதைய ஆங்கிலேய அரசிடம் டாப்சிலிப்பில் அவர் எழுப்பிய தோட்டத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று அனுமதி வாங்கினார். அதன்படி அவரது உடல் டாப்சிலிப் வனப்பகுதியில ஹியூகோ வுட் தங்கி இருந்த பங்களா அருகில் வானுயர்ந்த மரங்களுக்கு நடுவில் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அவர் இறந்த பிறகு பெரிய மரியாதையுடன் குன்னூரில் இருந்து டாப்சிலிப்பிற்கு உடல் கொண்டு வரப்பட்டது. மேலும் அவரது கல்லறையில் லத்தின் மொழியில் என்னை காண விரும்பினால் சுற்றிலும் பாருங்கள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ளது. அவரது கல்லறை நினைவுச்சின்னமாக பராமரிக்கப்படுகிறது.

ராயனூரில் கூம்பு வடிவத்தில் போர் வீரர்களின் நினைவுத்தூண்

கடந்த 1783-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மைசூர் போரின் போது திண்டுக்கல்லை கைப்பற்றிய ஆங்கிலேய படையானது அடுத்ததாக கரூரை கைப்பற்ற வந்து கொண்டிருந்தது. அப்போது கரூர் தாந்தோணி மலை பகுதியில் திப்பு சுல்தான் படைக்கும் ஆங்கிலேயர் படைக்கும் கடும் போர் ஏற்பட்டது. இதில் திப்பு சுல்தான் படைகளுடன் பொதுமக்களும் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் புரிந்ததால் ஆங்கிலேயர்களால் வெகு சிரமத்திற்கு பிறகு கரூரை கைப்பற்றினர். எனினும் பல வீரர்களை ஆங்கிலேய அரசு இந்த போரில் இழந்துள்ளது.

கரூரை கைப்பற்ற பல வீரர்களை இழந்த நிலையில் அவர்களுக்கு ராயனூரில் கூம்பு வடிவில் வித்தியாசமான வடிவமைப்பில் நினைவு தூண் ஒன்றை ஆங்கில அரசு அமைத்தது. இது கரூரில் போர் நடந்ததற்கான ஆதாரமாகவும், வரலாற்று சிறப்புமிக்கதாகவும் உள்ளது. அதில் உள்ள கல்வெட்டில் மைசூர் போரில் காயமடைந்த மற்றும் இறந்த வீரர்களை பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு சிறப்புமிக்க இந்த கல்வெட்டு கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்து இருந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அரசு மற்றும் தனியார் பங்களிப்பு நிதியுடன் அவற்றை புதுப்பித்து அதைச்சுற்றிலும் மதில் சுவர் அமைத்து தற்போது பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் அதை நாள்தோறும் பலர் கண்டு களித்து வருகின்றனர்.

வரலாற்று சின்னங்கள் நிறைந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

வேலாயுதம்பாளையம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்று சின்னங்கள் நிறைந்த கோவிலாகும். கோவிலின் விமான அமைப்பு, மைசூரு பகுதிகளில் இருக்கும் விமானங்கள் போல் அமைந்திருக்கிறது. சுமார் 400 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவுவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்கு திசையில் முருகனுடைய மயில்வாகன சன்னிதி அமைந்துள்ளது. மலைக்காவல் அய்யனாருக்கு என தனி சன்னிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன்-பார்வதி, அவ்வையார் சுதைகள் அமர்ந்த நிலையில் உள்ளன.இவற்றின் அருகில் கிழக்கு திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சன்னதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையை தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பார்த்த இடும்பன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து ஏறினால் கிழக்கு திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்துக்குள் நுழையலாம்.

மேலும் செய்திகள்