< Back
மாநில செய்திகள்
சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? பொதுமக்கள் கருத்து
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
26 Oct 2022 4:56 AM GMT

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'பம்பரகண்ணாலே' படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி ஒன்று இடம்பெறும். அதில் நடிகர் வடிவேலு கால்வாயில் விழுந்து, ஆங்காங்கே நீட்டிக்கொண்டு இருந்த கம்பிகளால் குத்தி கிழிக்கப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி, ரத்த களறியுடன் தனது மனைவியிடம் புலம்பும் காட்சி ஒன்று இடம்பெறும். இந்த காட்சி தான், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகளாக இருந்து வந்தது.

சென்னையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். மாத கணக்கில் பணிகள் நிறைவேறாத நிலையில், தோண்டப்பட்ட பள்ளங்களில் சேர்ந்து கிடக்கும் கழிவுநீர் ஒருபுறம், வாகன நெரிசல் என வெளியே சென்று வீடு திரும்பவே படாதபாடு பட்டார்கள். சகதிகாடாக கிடக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவதும் வாடிக்கையாகி போனது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சாலிகிராமம், வடபழனி, வளசரவாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், மாம்பலம், கிண்டி போன்ற பகுதிகளில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர்.

உயிரிழப்பும், உடனடி நடவடிக்கையும்...

இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். பொதுமக்களின் தரப்பில் இருந்து புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட பணிகள் மீண்டும் வேகம் எடுத்தன. இரவு-பகலாக பணிகள் மும்முரமாக நடந்தன.

80 முதல் 90 சதவீதம் வரையிலான பணிகள் முடிவு பெற்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஆனாலும் பல இடங்களில் இந்த பணி இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன், அருகேயுள்ள மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து இரவோடு இரவாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்து வரும் அனைத்து இடங்களில் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டன. வலை கொண்டு மூடப்பட்டன.

நீங்காத அச்சம்

ஆனாலும் மக்களிடையே அச்சம் இன்னும் நீங்கியபாடில்லை. பள்ளங்களில் தேங்கி கிடக்கும் கழிவுநீரும், பக்கவாட்டில் நீண்டு கொண்டிருக்கும் கம்பிகளும் மக்களை பெரும் அச்சம் கொள்ள செய்திருக்கின்றன. உயிரிழப்பு நேர்ந்த அந்த இடத்தில் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக திறந்து கிடந்த அந்த கால்வாய் இப்போது அவசரம் அவசரமாக மூடப்பட்டு வருகிறது. ஆனால் அந்த சாலையில் இருபுறமும் இன்னும் பணிகள் முடிக்கப்படாத, கவனம் செலுத்தப்படாத பள்ளங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக அந்த 100 அடி சாலையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்பாகவும், டீக்கடை, குடியிருப்புகள் முன்பாகவும் ராட்சத பள்ளங்களில் உள்ளே இருந்து அரக்கன் நம்மை பார்த்து சிரிப்பது போன்றே தோன்றுகிறது.

தடுப்புகளையும், வலைகளையும் கட்டி வைத்தால் மட்டும் போதுமா? பணிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி மக்கள் மனங்களில் நிச்சயம் எழுகிறது. ஆனாலும் முன்பு இருந்த அபாய நிலைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்று மனப்பட்டுக்கொள்வோரும் உண்டு. இப்படி பல எண்ணங்கள் மக்கள் மனங்களில் கடந்து செல்கின்றன.

அந்த வகையில் சென்னையில் தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக நடக்கிறதா, இல்லையா? என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

விரைந்து முடிக்க வேண்டும்



மாரஸ் (அசோக்நகர்):- அசோக்நகரில் பல இடங்களில் மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார்கள். தற்போது ஒரு உயிரிழப்பு சம்பவத்துக்கு பிறகு தடுப்புகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த தடுப்புகள் எந்தளவு கைகொடுக்கும் என்பது கேள்விக்குறிதான். அசோக்நகர் 100 அடி சாலையில் நெரிசலான நேரத்தில் வாகனங்கள் செல்லும்போது தடுப்புகளை மீறியும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழ வாய்ப்பிருக்கிறது. எனவே பள்ளங்களை விரைந்து மூடினால் மட்டுமே நல்லது.

கொடுமையோ... கொடுமை


எஸ்.நாகேஸ்வரி (மேற்கு மாம்பலம்):- பள்ளங்களை சுற்றி எச்சரிக்கைக்காக தடுப்புகள் வைத்தது நல்ல நடவடிக்கைதான். ஆனால் அந்த பள்ளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற என்ன வழி எடுக்கப்பட்டது? துர்நாற்றத்தால் நோய்கள் பரவத்தான் வாய்ப்புகள் உள்ளது. எனவே முதற்கட்டமாக கழிவுநீர் அகற்றப்பட வேண்டும். அதன்பிறகு பள்ளங்கள் மூடப்பட வேண்டும். பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் முன்பு இதுபோன்ற பள்ளங்கள் தோண்டி வைத்திருப்பது 'கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால்...' என்ற பழமொழியை தான் நினைவுபடுத்துகிறது.

மழைக்காலத்தில் என்னவாகும்...


எஸ்.சுடலையாண்டி (ஜாபர்கான்பேட்டை):- மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலத்துக்கு முன்பாகவே முடித்திருக்க வேண்டும். அதுவும் சுழற்சி முறையில் பகுதி வாரியாக இந்த பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் நடைபெறுவது பெரும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது. எனவே மக்கள் நலன் கருதி விரைந்து அனைத்து பணிகளையும் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் மழைகாலத்தில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாவது நிச்சயம்.

அனுபவித்த கஷ்டங்கள் போதும்...


வி.செந்தில்குமார் (ஜாபர்கான்பேட்டை):- விபத்துகள் நேர பெரும் காரணமே, சாலையில் இருக்கும் பள்ளங்கள் அடையாளம் காட்டப்படாததால் தான். ஆனால் இப்போது வலை கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் பல இடங்களில் இந்த பிரச்சினை இருக்கிறது. இதில் எதிர்பாராமல் சிக்கி விபத்துக்குள்ளாக நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதுவரை மக்கள் அனுபவித்த கஷ்டங்கள் போதும். இனியாவது விபத்துகள் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக தடுக்க...


தனலட்சுமி (அசோக்நகர்):- மழைநீர் வடிகால் பணிகள் என்பது மழைக்கால பிரச்சினைக்கு முடிவு கட்டத்தான். ஆனால் அதனால் விபத்துகள் நடக்கிறது என்றால் அந்த பணிகளில் முழு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அர்த்தமாகும். இன்னும் பெரிய மழை சென்னைக்கு வரவில்லை. ஒருவேளை அப்படி பெருமழை வந்தால் எங்கே பள்ளங்கள் உள்ளன? என்பதை பார்க்க முடியுமா? கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி என்ற நிலை வரவிடக்கூடாது. தடுப்புகள் வைப்பதில் கவனம் செலுத்தாமல், பிரச்சினையை முழுமையாக தடுக்க நடவடிக்கை வேண்டும்.

பள்ளி குழந்தைகள் அவதி



எம்.பிரேமா (மயிலாப்பூர்):- மழைநீர் வடிகால் பணிகள் ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் நடந்ததால் வியாபாரிகளும், ஆட்டோ டிரைவர்களும் படாதபாடு பட்டுவிட்டனர். எங்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பிரச்சினைகளை சந்தித்தோம். பள்ளி செல்லும் குழந்தைகளும், வேலைக்கு செல்வோரும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இனி அந்த நிலை வேண்டாம். சொன்னபடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

மக்கள் எதிர்பார்ப்பு

இந்த மாத தொடக்கத்திலேயே சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குறைந்தபட்சம் 15 நாட்களில் இருந்து அதிகபட்சம் 30 நாட்களுக்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடையும் என்று உறுதியளித்தார்.

அதன்படி இம்மாத இறுதிக்குள் சென்னையில் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்து இயல்புநிலை திரும்பவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எப்படி தீபாவளி பண்டிகைக்கு வருண பகவான் துணையாக நின்றாரோ... அதுபோல மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடையும் வரையில் கொஞ்சம் கருணையுடன் இருக்கவேண்டும் என்று சென்னை மக்கள் வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

எரியாத மின் விளக்குகளும் காரணமே... சமூக ஆர்வலர்கள் வேதனை

சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன், அருகேயுள்ள மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார். பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் சாலையில் உள்ள சில மின்விளக்குகள் எரியவில்லை. மேலும் அந்த 100 அடி சாலையில் சில இடங்களில் மின் விளக்குகள் எரியவில்லை எனவும், இதனால் தான் அடிக்கடி விபத்துகள் நேரிடுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலையோர விளக்குகள் எரிவது குறித்து உரிய ஆய்வு நடத்தவும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு தான் ஒரே தேவை: செல்போன் ஏற்படுத்தும் விபத்துகள்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருப்பதும், அதில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விழுந்து விபத்துகள் அரங்கேறுவதும் நடந்து தான் வருகிறது. ஆனால் இந்த விபத்துகளுக்கு செல்போன்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

முன்பெல்லாம் குனிந்த தலை நிமிராமல் போனால் அது அடக்கம் என்று பாராட்டி பேசுவார்கள். ஆனால் ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் சாலையில் செல்லும்போது தலை குனிந்து தான் நடக்கிறார்கள். அடக்கத்தால் இல்லை, கையில் அடக்கமான செல்போனை பார்த்துக்கொண்டு போகிறார்கள். இப்படி செல்போனில் கவனத்தை செலுத்தி சாலையில் கவனத்தை கோட்டை விடுவதால் விபத்தையும் பரிசாக வாங்கிக்கொண்டு போகவேண்டியுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து என்பது சிக்கலான ஒன்று. சீறி பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே செல்போன் கையுமாக சாலையில் நடப்பது என்பது, 'எமனை எட்டி பார்ப்பது போல' தான். எனவே மக்கள் குறிப்பாக இளைஞர்கள் விழிப்புணர்வு அடையவேண்டும். 'சாலையில் வேண்டாம் கைபேசி, விபத்து நேரலாம் நீ யோசி' என்ற போக்குவரத்து விழிப்புணர்வு வாசகத்தை மனதில் வைத்துக்கொண்டாலே, தேவையற்ற விபத்துகளை தவிர்த்துவிடலாம்.

மேலும் செய்திகள்