கள்ளக்குறிச்சி
மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா?
|நீர்நிலைகளில் மூழ்கி உயிரை மாய்த்துக்கொள்வதை தடுக்க மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? ஆசிரியர்கள், அதிகாரிகள் கருத்து
கள்ளக்குறிச்சி
பூமியில் பிறந்த மனிதன் உலகை மட்டுமின்றி பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவனாக திகழ்கிறான். எனினும் சிலர் அந்த பஞ்ச பூதங்களுக்கு இரையாகும் துயரமும் தொடருகிறது. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தண்ணீரை தேக்கி வைத்தும், ஆறு, கால்வாய்கள் வழியாகவும் விவசாயத்துக்கு கொண்டு செல்கிறோம். பூமியை தோண்டி கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்தும் பயன்படுத்துகிறோம்.
நீர்நிலைகளை கண்டால் குதூகலம்
உள்ளூர்காரனுக்கு பேயை கண்டால் பயம், வெளியூர்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம், ஆழம் தெரியாமல் காலை விடாதே போன்ற பழமொழிகள் தண்ணீரில் உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. எனினும் வெளியூர்களுக்கு செல்லும் இளைஞர்கள் அங்குள்ள நீர்நிலைகளை கண்டதும் குதூகலம் அடைகின்றனர். நீச்சல் தெரியாவிட்டாலும் அதில் குளித்தே தீர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. நீச்சல் தெரிந்தவர் அழைக்கும்போது நீச்சல் தெரியாதவரும் தண்ணீருக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலும் தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான பம்பை ஆறு, மலட்டாறு, நரியாறு மற்றும் வராகநதி, சங்கராபரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் பருவமழை காலங்களில் பெய்யும் தொடர் கனமழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த சமயங்களில் ஆறுகளிலும் மற்றும் தளவானூர், எல்லீஸ்சத்திரம், சொர்ணாவூர் உள்ளிட்ட அணைக்கட்டு பகுதிகளிலும் குளிக்கும் வெளியூர் நபர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அதுபோல் பருவமழை காலங்களின்போது மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கும் தண்ணீர் வரத்து வந்து அவை நிரம்புகின்றன. அவ்வாறு நிரம்பும் ஏரி, குளங்களிலும் சிறுவர்கள் குளிக்கச்சென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் துயர சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கோடை காலங்களில் பெரும்பாலான ஏரி, குளங்களில் குறைந்த அளவு தண்ணீரே இருக்கிறது. அதுபோன்ற ஏரிகள், குளங்களில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாமல் சிறுவர்கள், இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் துயரம் நிகழ்கிறது.
நீச்சல் பயிற்சி அவசியம்
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 55 ஆண்கள், 8 பெண்கள், 20 சிறுவர், சிறுமிகள் என 83 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 19 ஆண்கள், 4 பெண்கள், 3 சிறுவர், சிறுமிகள் என 26 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். பருவமழை காலங்களின்போதும், கோடை விடுமுறையின்போதும் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நெஞ்சை நொறுங்கச்செய்கிறது.
இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் நீச்சல் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சில நாடுகளில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது போன்று நீச்சல் பயிற்சியும் கட்டாயம் என்று கொண்டு வருவது நன்மை பயக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள், நீச்சல் ஆர்வலர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
வாழ்நாள் பாதுகாப்புக்கு உதவும்
திண்டிவனத்தை சேர்ந்த ஆசிரியர் பன்னீர்செல்வம்:-
பள்ளி விடுமுறை காலங்களில் நீர் நிலைகளில் குளிக்கச்செல்லும் சிறுவர்கள், சிறுமிகள் உயிரிழந்து வருவது வருந்தத்தக்க விஷயமாகும். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க சிறுவர், சிறுமிகளுக்கு கட்டாயம் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசு அனுமதியளித்தால் யோகா, கராத்தே போன்ற பயிற்சிகள் அளிப்பதுபோல் சிறுவர், சிறுமிகளுக்கு நீச்சல் பயிற்சியும் அளிக்கலாம். 10 வயது வரை உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நீச்சல் பயிற்சி என்பது மிக, மிக முக்கியமானது. ஏனெனில் அவர்கள்தான், பெற்றோரின் பேச்சை கேட்காமல் விளையாட்டுத்தனமாக நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, விளையாடவோ சென்று உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். எனவே சிறுவயதிலேயே நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்வதன் மூலம் அது வாழ்நாள் முழுவதும் நீர்நிலைகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவும்.
குழந்தை பருவத்திலேயே கற்க வேண்டியது
மேல்மலையனூரை சேர்ந்த தனியார் பள்ளி துணை முதல்வர் சரண்யா:-
மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டுமா? என்றால் நிச்சயம் அளிக்கப்பட வேண்டும். அதுவும் குழந்தை பருவத்திலேயே நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்வது மிகவும் நல்லது. இப்பயிற்சியை பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு அளித்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் நீச்சல் பயிற்சிக்கு என்று எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அக்கறையோடு நீச்சல் பயிற்சியை கற்றுத்தர முடியும். இன்றைய காலகட்டத்தில் நீச்சல் என்பது அனைவருக்கும் கட்டாயம். எனவே நீச்சல் பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். நீச்சல் தெரிந்தால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம். மனிதனுக்கு நீரும், காற்றும் முக்கியம் என்பதுபோல் நீச்சலும் மிக முக்கியம்.
115 பேரை காப்பாற்றியுள்ளோம்
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி ராஜேஷ் கண்ணன்:-
விழுப்புரம் மாவட்டம், நீர்நிலைகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் ஒன்று. மழைக்காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் இந்த நீர்நிலைகளில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர், நீர்நிலைகளில் விழுந்தவர்களை மீட்கும் பணிகளையும், நீரில் விழுந்து உயிரிழந்தோரின் உடலை தேடி கண்டுபிடிக்கும் பணிகளையும் செய்து வருகிறார்கள். மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையில் நன்றாக நீச்சல் தெரிந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் (தண்ணீரில் மூழ்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, ஆழமான குவாரியில் விழுந்தவர்களை மீட்பதற்கான பயிற்சிகள், ரப்பர் படகுகளை இயக்குவது மற்றும் விரைவாக மீட்பது பற்றிய பயிற்சிகள்) ஆகியவை வருடம் முழுவதும் வழங்கப்பட்டு எப்போதும் தயார் நிலையில் உள்ளார்கள். மாவட்டத்தில் கடந்த 2020, 2021, 2022 மற்றும் 2023-ல் (இதுவரை) நீர் நிலைகளில் மூழ்கி 141 ஆண்களும், 43 பெண்களும், 14 சிறுவர்- சிறுமிகளும் என 198 பேர் இறந்துள்ளனர். எங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் 68 ஆண்கள், 47 பெண்கள் என 115 பேரை காப்பாற்றியுள்ளோம்.
எச்சரிக்கை நடவடிக்கைகள்
பெரியவர்கள், குழந்தைகளை தனியாக நீர்நிலைகளுக்கு அனுப்பக்கூடாது. . நீர்நிலைகளின் ஆழமான பகுதிகளில் சென்று குளிக்கக்கூடாது. குழுவாக குழந்தைகள், நீர்நிலைக்கு செல்லும்போது விளையாட்டுத்தனமாக தண்ணீரில் தள்ளி விளையாடுவது, போட்டிகளில் ஈடுபடுவது, ஆழமான பகுதிக்கு செல்வது போன்ற செயல்கள் பல சமயங்களில் ஆபத்தில் முடிந்து விடுகிறது. ஆகையால் யாரும் அத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது.
ஆறுகளில் சில பகுதிகளில் சுழல்கள் இருக்கும். அப்பகுதியில் குளிக்க செல்லக்கூடாது. ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் சமயத்தில் கண்டிப்பாக குளிக்கக்கூடாது. அதுபோன்ற சமயங்களில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் தண்ணீர் திறந்து விடும் அறிவிப்பை கண்காணித்து அச்சமயங்களில் நீர் நிலைகளுக்கு செல்லக்கூடாது. சிலர், நீர்நிலைகளின் அருகில் மது குடிப்பதை பொழுதுபோக்காக வைத்துள்ளார்கள். இதனால் மதுபோதையில் தண்ணீரில் விழுந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளில் கைப்பேசியின் மூலம் செல்பி எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்படி செல்பி எடுக்கும்போது தவறி தண்ணீரில் வீழ்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுபோல் நீர்நிலைகளில் நிலப்பரப்புகள் ஒரே லெவலில் இருப்பது இல்லை. சில இடங்களில் சமூகவிரோதிகள் மணல் எடுத்து அந்த பகுதிகள் மிகவும் ஆழமானதாக இருக்கும். அதுபோன்ற பகுதியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆற்றின் சில பகுதிகளில் புதை மணல்கள் இருக்கும், அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைப்பதோடு, குளிப்பதை தவிர்த்திட வேண்டும். மாணவர்கள், கடலில் அலைகள் அதிகமாக இருக்கும்போது குளிக்கச் செல்லக்கூடாது.
விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வழிகள்
நீரில் மூழ்கியவர்களை எப்படி மீட்பது என்பது பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். நீரில் மூழ்கியவர்களை மீட்பதோடு, அவர்கள் வயிற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் முறைகள், செயற்கை சுவாசம் வழங்குவது போன்ற முதலுதவி பயிற்சிகளை வழங்குவதன் மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும். மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு துறையின் மூலமாக நீர் நிலைகளில் பாதுகாப்பாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். அது பேராபத்து காலத்தில் தம்மை காப்பாற்றிக் கொள்ள உதவுவதோடு பிறரின் உயிரையும் காப்பாற்ற உதவிகரமாக இருக்கும். நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
உடல்நலன் ஆரோக்கியமாக இருக்கும்
விழுப்புரத்தை சேர்ந்த நீச்சல் ஆர்வலர் கோபாலகிருஷ்ணன்:-
நீச்சல் பயிற்சி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு அரசு சார்பில் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். நீச்சல் என்பது உயிர்காக்கும் ஒரு கலையாகும். நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் இயங்குவதால் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும், மனம் ஒருநிலைப்படும். சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடுகள் ஏற்படும். ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும்போது விலைமதிப்பில்லா தன் உயிரை தற்காப்பது மட்டுமின்றி பிற உயிர்களையும் நம்மால் காப்பாற்ற முடியும். பள்ளி விடுமுறை நாட்களிலும், கோடை விடுமுறை நாட்களிலும் மாணவர்களின் தனித்திறமைக்காக கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளுக்காகவும் மற்றும் கணினி பயிற்சிக்காகவும் அனுப்புவதை போன்று நீச்சல் கற்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும். நீச்சல் கற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து திறமையும், தகுதியும் வாய்ந்த பயிற்சியாளர்களை நியமனம் செய்து முறையாக மாணவ- மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சியளிக்க வேண்டும்.
தற்காப்பு கருவி
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன்:-
பொதுவாக ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரை கண்டதும் சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி வாலிப வயதுடையோருக்கும் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். ஆனால் அதன் ஆழம், தண்ணீருக்கு அடியில் இருக்கும் சேறு வெளியே தெரியாததால் அதுபற்றி யாரும் சிந்திப்பது இல்லை. ஆழம் குறைவாக இருக்கும் என்று கருதி கரையோரம் இறங்கி குளிப்பார்கள். பின்னர் நீச்சல் தொியாமல் ஆழமான பகுதியிலோ அல்லது சேற்றிலோ சிக்கி நீரில் மூழ்கி பலியாகி விடுகிறார்கள். இதில் பெரியவர்களை விட சிறுவர், சிறுமியர்தான் அதிக அளவில் பலியாகி இருக்கிறார்கள். நீச்சல் கற்று இருந்தால் இதுபோன்ற நீர் நிலைகளில் அபாயகரமான பகுதி என்று தெரிந்தால் கூட நீந்தி கரையேறி உயிர் தப்பி விடலாம். நீர் நிலைகளில் குளிக்கும்போதோ அல்லது எதிர்பாரத விதமாக நிகழும் ஆபத்துகளின் போதோ தப்பிக்க உதவும் ஒரு தற்காப்பு கருவி என்றாலும் நீச்சல் பயிற்சி ஒரு சிறந்த உடற் பயிற்சியும் ஆகும். எனவே மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றுதான். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.