சிவகங்கை
பள்ளி வாகனங்கள் தகுதியாக இருக்கிறதா?
|சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் தகுதியாக இருக்கிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய 2 இடங்களில் நேற்று பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று, அதற்கான ஆய்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, ஆகிய 7 இடங்களில் செயல்படும் 64 பள்ளிகளுக்கு சொந்தமான 175 பள்ளி வாகனங்கள் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் தகுதிச்சான்று வழங்குவதற்கான ஆய்வுக்காக கொண்டுவர உத்தர விடப்பட்டது.
இதில் 126 பள்ளி பஸ்கள் தகுதிச்சான்றுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த பஸ்களை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன், சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் ஒவ்வொரு பஸ்களிலும் படிக்கட்டுகள் சரியாக உள்ளதா? இருக்கை வசதி உள்ளதா? அவசரகால வழி உள்ளதா? டிரைவரின் அருகில் உள்ள பிரேக்குகள் சரியாக செயல்படுகின்றதா? பஸ்சில் உள்ள தரைப்பகுதி சரியாக உள்ளதா? சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.வேக கட்டுப்பாடு கருவி உள்ளதா/ தீயணைக்கும் கருவி, முதலுதவி சிகிச்சை அளிக்கும் பொருட்கள் உள்ளதா என்று பார்த்து ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் கூறியதாவது;-
சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நேற்று பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வு நடைபெற்றது. இதில் சிவகங்கையில் 126 வாகனங்களில் 13 வாகனங்களுக்கு சி.சி.டி.வி கேமரா பொருத்துவது, கை பிரேக் செயல்படாது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தகுதிச்சான்று வழங்கப்படவில்லை. அவர்கள் போதுமான வசதிகளை செய்து வந்த பின்னர் அவர்களுக்கு தகுதி சான்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.