< Back
மாநில செய்திகள்
எழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? கண்காணிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
17 Jun 2023 11:39 AM IST

எழும்பூர் ரெயில் நிலைய விரிவாக்கத்துக்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகள் நடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், குறை இருந்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என்றும் பசுமைத்தாயகம் அறக்கட்டளைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், பசுமைத்தாயகம் அறக்கட்டளையின் செயலாளர் அருள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் அறக்கட்டளை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக சென்னையில் ஏராளமான மரங்கள் கண் மூடித்தனமாக வெட்டி அகற்றப்பட்டன. தற்போது, எழும்பூர் ரெயில்வே நிலையத்தில், விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 400-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட உள்ளனர்.

இந்த மரங்கள் எல்லாம் 80 ஆண்டுகள் பழமையானது. இந்த மரங்களில் வாழ்ந்த ஏராளமான பறவைகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. அந்த பறவைகளின் குஞ்சுகள் தரையில் விழுந்து உயிரிழக்கின்றன.

எனவே, ரெயில்வே விரிவாக்கத் திட்டத்துக்காக மரங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.

மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள மாவட்ட பசுமை ஆணையம் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "எழும்பூர் ரெயில் நிலையம் விரிவாக்கத்துக்காக, அங்குள்ள 108 மரங்களை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், வெட்டப்படும் 318 மரங்களுக்கு, ஒரு மரத்துக்கு 12 மரக்கன்றுகள் என்ற விகிதத்தில் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதன்படியே இந்த மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த உத்தரவாதங்களின்படி மரங்கள் இடமாற்றுதல், புதிய மரக்கன்றுகள் நடுதல் பணிகள் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறை இருந்தால், மனுதாரர் மீண்டும் இந்த ஐகோர்ட்டை நாடலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்