< Back
மாநில செய்திகள்
மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?-கர்ப்பிணி பெண்கள் கருத்து
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?-கர்ப்பிணி பெண்கள் கருத்து

தினத்தந்தி
|
13 March 2023 12:27 AM IST

தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவு கலவைகள் வழங்கப்படுகின்றன.

சத்துமாவு கலவை

கோதுமை மாவு (45.50 கிராம்), வறுத்த கேழ்வரவு மாவு (6 கிராம்), செறிவூட்டப்பட்ட பாமாயில் எண்ணெய் (5 மி.லி.), முளைக்கட்டிய கேழ்வரகு மாவு (5 கிராம்), கொழுப்பு நீக்கப்படாத சோயா மாவு (10.50 கிராம்), வெல்லம் (27 கிராம்), தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் (1 கிராம்) ஆகிய 7 பொருட்கள் அடங்கிய சத்துமாவு கலவை தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் வறுத்த கடலை மாவு (10 கிராம்), வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (5 கிராம்), வறுத்த வேர்க்கடலை மாவு (4 கிராம்) ஆகிய 3 மூலப்பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கோதுமை, சோயா மாவு வறுத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புது வடிவம்

2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துமாவும் புது வடிவம் பெற்றுள்ளது. இதில் வறுத்த கோதுமை மாவு, வெல்லத்தூள், வறுத்த சோயா மாவு, வறுத்த நிலக்கடலை மாவு, முளைக்கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த சத்துமாவு 'பாக்கெட்' தற்போது கலர்புல்லாக மாறி உள்ளது. என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? என்பது எழுத்தாகவும், படமாகவும் 'பாக்கெட்' கவரில் பளிச்சென்று அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன? என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதத்துக்குட்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்மார்களுக்கு சத்து டானிக், புரோட்டீன் பவுடர், நெய், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஊட்டச்சத்து பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி வீடு தேடி இந்த பொருட்கள் வருகிறதா? உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? என்பவை பற்றி புதுக்கோட்டையை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பணம் கிடைக்கவில்லை

புதுக்கோட்டையை சேர்ந்த மாரிக்கண்ணு:- மகப்பேறு கால நிதி உதவி திட்டத்தில் எனக்கு முதல் குழந்தைக்காக கர்ப்ப காலத்தில் ரூ.4 ஆயிரமும், பிரசவத்திற்கு பின் ரூ.4 ஆயிரமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்பின் மீதிப்பணம் பற்றி கேட்ட போது சரியான விளக்கம் இல்லை. நாங்களும் அதனை அப்படியே விட்டுவிட்டோம். தற்போது 2-வது குழந்தை பிரசவத்திற்காக ஒரு தடுப்பூசி செலுத்தி உள்ளேன். இதற்கு இத்திட்டத்தில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவி கர்ப்பிணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. சத்தான, தேவையான உணவுகளை வாங்கி சாப்பிட முடிகிறது. கர்ப்ப காலத்தில் உடல் நலத்தை பேண முடிகிறது. ஆனால் இத்திட்டத்தில் பலருக்கு முழுமையாக பணம் கிடைக்கவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் தான் முழுமையாக பணம் கிடைத்துள்ளது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு முழுமையாக பணம் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயனுள்ளதாக இருக்கிறது

அன்னவாசலை சேர்ந்த ஷாலினி:- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்தான உணவு கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகமும், நிதியுதவியும் வழங்குகின்றனர். இந்த திட்டத்தில், கர்ப்பம் உறுதியான, 12 வாரங்களுக்குள் கிராம, சுகாதார செவிலியர்களிடம் சென்று ஆர்.சி.எச். அடையாள எண் பதிவு செய்கிறோம். பின்னர் 3 மாத முடிவில் முதல் ஊட்டச்சத்து பெட்டகமும், 4-ம் மாத முடிவில் 2-ம் ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இந்த பெட்டகத்தில் சத்துமாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், குடல்புழு நீக்க மாத்திரை, டீ கப், பருத்தி துண்டு, நெய், பிளாஸ்டிக் கூடை உள்ளிட்டவைகள் இருக்கும். எங்களுக்கு இந்த ஊட்டச்சத்து பெட்டகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மருத்துவ பரிசோதனை

வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அபிநயா:- நான் தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளேன். எனக்கு ரூ.2 ஆயிரம் எனது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. ஊட்டச்சத்து மாவு அருகேயுள்ள பால்வாடி மையம் மூலமாக முறையாக வழங்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வடகாடு அரசு மருத்துவமனையில் நடைபெறும் கர்ப்பிணிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளும் முறையாக நடைபெற்று வருகிறது.

கீரனூர் அருகே உள்ள விசலூர் கிராமத்தை சேர்ந்த பிரியா:- தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளேன். விசலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்துமாவும், 15 நாட்களுக்கு ஒரு முறை மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. டாக்டர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து குழந்தை வளர்ச்சியை கவனித்து வருகிறார்கள். கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை உரிய முறையில் வழங்கப்படுகிறது.

ஊட்டச்சத்து பெட்டகம்

விராலிமலை காமராஜர் நகரை சேர்ந்த செபஸ்தியம்மாள்:- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகையானது பல்வேறு தவணைகளாக பிரித்து கொடுப்பதால் குறிப்பிட்ட காலத்தைக் கடந்து தாமதமாக சில நேரங்களில் கிடைப்பது வேதனைக்குரியதாக உள்ளது. மேலும் கர்ப்பக்காலத்தில் அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் கர்ப்பிணிகளுக்கு அக்காலத்தில் வழங்கப்படும் சிகிச்சையில் இன்னும் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகிறது. காரணம் கர்ப்பக்காலங்களில் கர்ப்பிணி பெண்களின் உடலின் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ளவும், அதற்குரிய சிகிச்சை அளிக்கவும் பல்வேறு விதமான சோதனைகள் மருத்துவமனையில் எடுக்க வேண்டி உள்ளது. ஆனால் அதற்கான மருந்துகள் அடங்கிய கிட் போதியளவு இருப்பு வைத்துக்கொள்வதில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒரு சில நேரங்களில் வறுமையின் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் குறிப்பிட்ட காலத்தில் எடுக்க வேண்டிய சோதனைகளை எடுக்காமல் சிலர் விட்டு விடுகின்றனர். எனவே கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகையை காலதாமதம் இன்றி கிடைத்திடவும், கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய அனைத்து மருந்துகளையும் அதிகளவில் அரசு மருத்துவமனையிலேயே இருப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.

காலதாமதம்

அரிமளம் மயிலாடும் பாறையை சேர்ந்த சவுந்தர்யா:- கர்ப்பிணிகளுக்கு முறையான பரிசோதனைகள் மாதந்தோறும் தாய் சேய் நல விடுதியில் செய்யப்படுகிறது. அங்கு எங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு இது பயனுள்ளதாக உள்ளது. உதவித்தொகையை பொருத்தமட்டில் கர்ப்பம் உறுதி செய்ய பிறகு 2-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும், 3-ம் மாதத்தில் ரூ.2 ஆயிரமும், தடுப்பூசி போடும் போது எங்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது 7 மாதம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய உதவித்தொகை கிடைக்கவில்லை. சில பெண்களுக்கு பிரசவம் ஆன பிறகும் கூட மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் உதவித்தொகை கிடைப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. அதுதான் எங்களுக்கு சிரமமாக உள்ளது.

ரூ.12¾ கோடி நிதி ஒதுக்கீடு

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தில் முதல் பிரசவத்திற்காக நிதியுதவி மட்டும் கொஞ்சம் தாமதமாகி வருகிறது. அந்த நிதி மத்திய அரசு மூலம் நேரடியாக ஒதுக்கப்படுகிறது. பயனாளிகளின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகிறது. அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என்று கூற முடியாது. இந்த திட்டத்தில் நிதியுதவி பெற சில நடைமுறைகள் உள்ளன. சிலர் இத்திட்டத்தில் தங்களுக்கு முழு பணமும் கிடைக்கவில்லை எனக்கூறுவது உண்டு. ஆனால் அப்படி யாருக்கும் நிறுத்தப்படுவதில்லை. கருவுற்றதும் 12 வாரங்களுக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் பணம் கிடைக்காது. அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றாலும், கருத்தடை சாதனம் போட வேண்டும். ஆனால் கருத்தடை சாதனம் போடாவிட்டால் அதற்குரிய நிதி கொடுக்கப்படுவதில்லை. குழந்தைகளுக்கான தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியை செலுத்தாவிட்டாலும் முழுத்தொகை கிடைக்காது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு நிதியாண்டில் 12 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 11 கோடியே 63 லட்சத்து 2 ஆயிரம் நிதி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

உதவித்தொகை

வீடு தேடி வரும் ஊட்டச்சத்து பொருட்கள் கர்ப்பிணி பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் நிதி உதவி முறையாக கிடைப்பது இல்லை என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, 'அரசு ஆஸ்பத்திரிகள், சுகாதார நிலையங்களில் 'பிக்மி' எண் பெற்று இங்கேயே பிரசவ கால உடல் பரிசோதனைகள் மற்றும் பிரசவம், குழந்தைக்கு தடுப்பூசி ஆகியவற்றை மேற்கொள்ளும் கர்ப்பிணி பெண்கள் வங்கி கணக்கில் 5 தவணைகளாக ரூ.18 ஆயிரம் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது' என்று கூறினார்.

பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பு

புதுக்கோட்டை ராணியார் (தாய் சேய் மற்றும் பச்சிளம் குழந்தைகள்) அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்ட தாய் சேய் நல மருத்துவமனையாக நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிரசவங்களின் எண்ணிக்கை 5,590 ஆக இருந்தது. கடந்த 2022-ம் ஆண்டு 7,777 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களாக மகப்பேறு மரணம் ஏதும் இல்லை. கடந்த 2022-ம் ஆண்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 51 கர்ப்பிணிகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் செயற்கை சுவாசம் மற்றும் தீவிர சிகிச்சையால் நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். இது மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை என்பதனால் பிற மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 17 தாய்மார்களும் இதில் அடங்குவர். அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளில் 50-60 சதவீதத்தினர் அபாயகரமான நிலையில் அழைத்துவரப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என டீன் பூவதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்