< Back
மாநில செய்திகள்
திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

திருமணத்துக்கு நேரில் அழைப்பது குறைந்து வருகிறதா?

தினத்தந்தி
|
4 March 2023 1:06 AM IST

ஒரு வீட்டில் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமண தேதி முடிவானால் போதும், அடுத்த முதல் வேலை கல்யாண கடிதாசி அச்சடிப்பதுதான். பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, மச்சான் என்று உறவுகளின் பெயர்களை அச்சிடுவது. அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு பழங்களுடன் நேரில் போய் அழைப்பிதழைக் கொடுப்பது. அப்போது பேசாத உறவினர்கூட ‘சரி.. அவன் நேரில் வந்து அழைத்துவிட்டான். கடிதாசிலும் பெயர் போட்டுவிட்டான்' என்று பழைய பகையை மறந்து விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்துவது என்று சுமுகமாக உறவுகளை புதுப்பிக்கும் விழாவாகத்தான் சமூகத்தில் திருமண விழாக்கள் பார்க்கப்பட்டன.

மாறிக்கொண்ட மக்கள்

இவ்வாறு நேரில் பார்த்து அழைப்பிதழை பூ பழத்துடன், வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து உறவினர்களை 'கண்டிப்பா வந்துடுங்க...' என உரிமையுடன் அழைப்பது நமது மரபும் கூட. ஆனால், இன்றைக்கு எல்லாமே மாறிவிட்டது. மாறி வரும் சூழலுக்கேற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்பவும் மக்களும் மாறிவிட்டார்கள். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் 'வாட்ஸ்-அப்', 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழை அனுப்பி வைத்துவிட்டு அமைதியாக இருந்து விடுகிறார்கள். மாறி வரும் இந்த கலாசாரம் பற்றிய புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கருத்து என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

உறவுகளை வலுப்படுத்த முடியும்

புதுக்கோட்டையை சேர்ந்த குடும்ப தலைவி பிரபாவதி:- திருமண நிகழ்ச்சிகளுக்கு நேரில் சென்று உறவினர்களுக்கு பத்திரிகை கொடுத்தால் தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் உரிய மரியாதை ஆகும். ஆனால் இன்று பலர் வாட்ஸ்-அப்பில் அனுப்பி தகவல் தெரிவிக்கின்றனர். இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூற முடியாது. அவர்களும் நேரில் திருமண நிகழ்ச்சிக்கு வருவதை தவிர்த்துவிடுவார்கள். ஒரு சிலர் வேண்டுமானால் அங்கீகரித்து கொள்வார்கள். இருப்பினும் நாம் நேரில் சென்று பத்திரிகை கொடுத்தால் தான் திருப்திகரமாக இருக்கும். இன்றைய தலைமுறையினருக்கு உறவுகள் பற்றி விவரம் தெரியும். சொந்தத்தின் வழியில் உள்ள உறவு முறைகள் பற்றி இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிவதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு நாம் நேரில் சென்று கொடுக்கும் போது உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும். நேரில் சென்று அழைப்பதினால் ஏற்படக்கூடிய செலவு, கால நேரம், அலைச்சல் போன்றவற்றை கணக்கிடக்கூடாது. முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களும் மதித்து குடும்பம் சகிதம் நேரில் வருகை தருவார்கள். இதனை முன்பு போல் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் நமது சந்ததியினருக்கு உறவுகள் முறை பற்றி தெரியவரும்.

கலாசார சீர்கேடு இல்லை

கீரனூர் குளத்தூரை சேர்ந்த ரகுராமன்:- வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்களிடம் கொடுப்பது சிரமமான வேலை. தொழில்நுட்ப வளர்ச்சி பெறாத காலக்கட்டங்களில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அனைத்து சொந்தங்களும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருப்பார்கள். தற்போது எல்லோருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. அனைவரும் படித்து உள்ளனர். தற்போது 5ஜி தொழில் நுட்பம் இருப்பதால் இல்ல விசேஷங்களுக்கு வாட்ஸ் அப், செல்போன், இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கிறார்கள். ஒருசிலர் தங்களது இல்ல விசேஷங்களுக்கு உறவினர்களை நேரில் சென்று அழைக்காமல் நாளிதழில் விளம்பரம் செய்கிறார்கள். சிலர் பே.டி.எம்., ஜி.பே. மூலம் மொய் எழுதுகிறார்கள். இதனால் எந்தவித கலாசார சீர்கேடும் இல்லை.

பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும்...

அரிமளம் பகுதியை சேர்ந்த நாகஜோதி:- அக்காலத்தில் பெண் பார்க்கும் படலத்தையே ஒரு பெரும் நிகழ்வாக நம் முன்னோர்கள் வைத்திருந்தனர். தான் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த போதிலும் தன் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள உறவினர்களை எல்லாம் நேரில் சென்று ஒரு மாதத்திற்கு முன்பாகவே அழைப்பு விடுத்தனர். ஆனால் தற்போது நாகரிகம் என்ற பெயரில் திருமணத்திற்கு அழைப்பது ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது. இதனால் இப்போது திருமண அழைப்புகளை நேரில் சென்று கொடுத்து யாரையும் அழைப்பதில்லை. அவர்கள் அவசியம் வர வேண்டும். நமது வீட்டு விசேஷங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. சம்பிரதாயத்திற்கு வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் பத்திரிகையை அனுப்பி விடுகின்றனர். அவ்வாறு அனுப்பும் நபர்கள் உறவினர்கள், நண்பர்களை போனில் கூட அழைத்து திருமணத்தில் கலந்து கொள்ளுங்கள் என அழைப்பதில்லை. இதனால் அவர்கள் மொய் செய்ய நேரில் வராமல் கூகுள் பே, போன் பே மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து விடுகின்றனர். இப்படி தொடர்ந்து நடந்தால் வருங்காலங்களில் நம்முடைய பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும் நமது குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விடும்.

இணைய சேவையின் வளர்ச்சி

கீரமங்கலத்தை சேர்ந்த முத்தமிழ்செல்வி:- திருமண பத்திரிகைகளை தங்கள் உறவினர் வீடுகளுக்கு நேரில் சென்று கொடுத்து அவசியம் வரணும் என்று அழைப்பார்கள். தற்போது இணைய சேவையின் வளர்ச்சி காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் திருமண அழைப்பிதழை நண்பர்கள், உறவினர்களுக்கு இளைய தலைமுறையினர் அனுப்பி வைக்கிறார்கள். இது மிகவும் தவறு. சொந்த பந்தங்களை நேரில் பார்த்து விழாவுக்கு அழைப்பதால் உறவுகளின் பெருமையும், ஒற்றுமையும் கூடும். அதேபோல் நேரில் சென்று மொய் வைத்த காலம் மாறி ஆன்லைன் மூலம் மொய் பணத்தை சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்குக்கு அனுப்ப தொடங்கிவிட்டனர். கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஆன்லைனில் மொய் செய்யும் பழக்கம் இன்னும் வரவில்லை. விரைவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலாசார சீரழிவு

திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி, நிச்சயதார்த்தம், காதணி விழா, புதுமனைப் புகுவிழா, மஞ்சள் நீராட்டு, குழந்தைகள் பெயர் சூட்டுவிழா, அலுவலக திறப்பு விழா, பழைய நண்பர்கள் ஒன்றுகூடும் விழா என்பன உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் அழைப்பிதழ்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் மூலமாக நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தத்தில், சமூக வலைதளங்களில் திருமண அழைப்பிதழ் அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்றும், அது கலாசார சீரழிவுகளுக்கு வழிவகுத்து விடும் என்றும் மக்கள் கருதுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை பின்பற்றலாமே.

மேலும் செய்திகள்