கரூர்
இலவசங்கள் அவசியமா?
|தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.
உயிர் ஆதாரம்
இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வு ஆதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூட காண முடிந்தது.
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.
இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.
பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு
இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிப்பட கூறி இருக்கிறார்.
இதுபற்றி கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
மருந்து, மாத்திரைகள்
கரூர், காமராஜபுரத்தை சேர்ந்த மனநல ஆலோசகர் சுப்பிரமணியன்:- மருந்து, மாத்திரைகளை இலவசமாக கொடுப்பது பாராட்டுக்குரியது. இதில் குழந்தைகளுக்கு 6 மாதம், 1 வருடங்களில் போடப்படும் தடுப்பூசி வெளியில் அதிக விலையில் உள்ளது. அந்த தடுப்பூசியை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதனை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற இலவசங்கள் தவறில்லை. சாமானியனுக்கு கிடைக்காத பொருட்களை இலவசமாக கொடுப்பது தவறில்லை. ஆனால் மக்களுக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை இலவசமாக வழங்குவது தவறுதான். தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டோம் என்பதற்காக எளிதாக கிடைக்கக்கூடியதை எதற்காக இலவசமாக கொடுக்க வேண்டும். அது தேவையில்லை.
நலத்திட்டங்களை தடுக்க கூடாது
நொய்யல் அருகே சேமங்கி பெரியார் நகரை சேர்ந்த அழகேசன்:- தமிழகத்தில் தேர்தல் வரும்போது அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவிக்கின்றனர். வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன. இதனால் ஏழைகள் பயன் பெறுகின்றனர். தமிழக அரசால் கொடுக்கப்படும் நலத்திட்ட உதவிகளை தடுப்பது சரி இல்லை. நலத்திட்ட உதவிகளால் பயன்பெறுவது ஏழைகள் தான். எங்களைப்போன்ற ஏழைகளுக்கு இலவச திட்டங்கள் அவசியம்.
வேலைவாய்ப்பு
கரூர் அரசு கலைக்கல்லூரி, 2-ம் ஆண்டு முதுகலை பொருளியல் மாணவர் கோகுல்:- இன்றைய இளம் தலைமுறையினருக்கு இன்றியமையாதது வேலைவாய்ப்பு ஆகும். ஒரு நல்ல அரசு என்பது வேலைவாய்ப்பினை உருவாக்கி இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். இலவசங்களை வழங்குவது என்பது நிரந்தர தீர்வு அல்ல. அப்படி வழங்கப்படும் இலவசங்கள் நீண்ட காலத்துக்கு உதவாது. மேலும் வழங்கப்படும் இலவசங்கள் ஆதரவற்ற, வறுமையில் இருக்கும் குடும்பங்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் இலவசமாக வழங்கும் டி.வி., சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவைகள் கள்ளச்சந்தைக்கு சென்று சேர்ந்து விடுகிறது. இதுபோன்ற இலவசங்களை தவிர்த்து முதல் பட்டதாரி குடும்பத்திற்கோ, வேலைவாய்ப்பற்ற குடும்பத்தில் ஒருவருக்கோ நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்குவதின் மூலம் அக்குடும்பம் நீண்ட காலம் செழித்து நிற்கும்.
தேர்தல் வாக்குறுதி
வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த நாராயணன்:- நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நலத்திட்டங்கள் குறித்து தேர்தலில் வாக்குறுதி அளிப்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் சிலவற்றை செய்வார்கள். சிலவற்றை செய்ய மாட்டார்கள். நலத்திட்ட உதவிகள் வழங்குவதால் ஏழைகள், நடுத்தர மக்கள் பயன் பெறுகிறார்கள். வசதி படைத்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் தேவைப்படுவதில்லை. எனவே ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது சரியானது தான். தமிழக அரசு மூலம் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம். இதனால் எங்களைப்போன்ற ஏழைகள் பயன் பெறுகிறார்கள்.
ஆட்சியை பிடிக்க...
குளித்தலை காவல்காரன் தெருவை சேர்ந்த செல்வகுமார்:- இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசியை சிலர் உணவு சமைத்து சாப்பிட்டுக்கொண்டு வேலைக்கு செல்லாமல் சோம்பேறியாக உள்ளனர். கணிசமான விலையில் தரமான அரிசியை வழங்கும் பட்சத்தில் அனைவரும் வாங்கி பயனடைவார்கள். எந்த ஒரு கட்சியும் இலவச திட்டங்களை அறிவிக்க கூடாது என்ற முடிவுக்கு வர வேண்டும். தேர்தலின் போது ஆட்சியைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி ஏதாவது திட்டங்களை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்டு வெற்றி பெற்று விடுவார்களோ? என்ற அச்சத்தின் காரணமாகத்தான் பல்வேறு அரசியல் கட்சிகள் இலவச திட்டங்களை அறிவிக்கிறது. இலவசத் திட்டம் என்பது ஏழை, எளிய மக்கள் மட்டும் பயனடையும் திட்டமாக இருக்க வேண்டும். பணம் படைத்தவர்களுக்கு இலவசங்கள் என்பது தேவையில்லை. உழைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இலவச திட்டங்களை எதிர்பார்க்க மாட்டார்கள்.
மாநிலத்தின் கடன்சுமை அதிகரிக்கும்
கரூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் லோகேஷ்:- இலவச திட்டங்கள் என்பது அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய கூறப்படுவதே அன்றி மக்களின் வாழ்வியல் மேம்பாட்டினை ஒருபோதும் உயர்த்தாது. இலவசமாக வழங்கப்பட்ட பொருட்கள் தற்போது எத்தனை வீடுகளில் இயங்கி கொண்டிருக்கிறது?. இலவச திட்டங்கள் என்பது மக்களின் வரி பணத்தை இலவசம் எனும் பெயரில் மக்களுக்கே வழங்கும் ஒரு மோசடியாகும். மக்கள் தெருவில் நின்று போராடி கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இலவசம் எனும் பெயரில் ஆசை வார்த்தைகளை கூறி அரசியல்வாதிகள் வாக்குகளை அறுவடை செய்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்திற்கான கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும். ஆனால் இவை மூன்றும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, இலவசம் என சொல்லி மக்கள் கேட்காதவற்றை வழங்கி மாநிலத்தின் கடன் சுமையை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.