< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா?
விருதுநகர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா?

தினத்தந்தி
|
16 May 2023 12:27 AM IST

திருத்தங்கல் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பட்டாசு மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

சிவகாசி,

திருத்தங்கல் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பட்டாசு மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பட்டாசு ஆலைகள்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் பட்டாசு ஆலைகளில் நடைபெற்று வந்த விதி மீறல்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால் பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளின் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க சிலர் பொதுமக்கள் நடமாட்டம் இல்லதா வனப்பகுதி மற்றும் பட்டாசு ஆலைகளின் அருகில் உள்ள காலி இடங்கள், பட்டாசு கடைகள் பின்புறம் உள்ள பகுதிகளில் பட்டாசுகளை உற்பத்தி செய்து வந்தனர். இதனையும் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

குடியிருப்பு பகுதி

இந்தநிலையில் திருத்தங்கல் போலீஸ்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பட்டாசு தயாரிக்க தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கருந்திரி, வெள்ளை திரி ஆகியவை அனுமதியின்றி கொண்டு செல்லும் போது போலீசாரின் சோதனையில் சிக்கி வருகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நடத்திய சோதனையில் கே.கே.நகர் பகுதியில் அனுமதியின்றி திரிகளை கொண்டு சென்ற சிவபெருமான் (வயது 43) என்பவரை கைது செய்தனர். ஏற்கனவே கடந்த 13-ந்தேதி கருந்திரி கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை தேவை

இந்த தொடர் சம்பவங்கள் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரிகளின் தொடர் நடவடிக்கைக்கு அஞ்சிய சிலர் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளை அனுமதியின்றி தயாரித்து வருகிறார்களா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை அனுமதியின்றி கொண்டு செல்பவர்கள் மீதும், குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்