< Back
மாநில செய்திகள்
ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது
சென்னை
மாநில செய்திகள்

ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது

தினத்தந்தி
|
24 Jun 2023 1:42 PM IST

ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கு: மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைதுஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், அதன் துணை நிறுவனம் ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனம் நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் ஈடுபடுவதாக கூறியது.

இந்த நிறுவனத்தினர், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ.12 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்தனர். அந்த நிறுவனத்தின் கவர்ச்சியான விளம்பரத்தை பார்த்த பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் முதலீடு பணத்தை ஏமாற்றி மோசடி செய்தனர். இதையடுத்து பணத்தை இழந்தவர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில், நொளம்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த நிறுவனம் சுமார் 500 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

நொளம்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், நகைக்கடை, முகப்பேரில் உள்ள நகைக்கடை, நிறுவனத்தின் நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை செய்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பொருட்கள், ரூ.7 லட்சத்து 87 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆல்வின் ஞானதுரை, அவரது சகோதரர் ராபின் ஆரோன் ஆகிய 2 பேரும் கடந்த 10-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தென்காசியில் உள்ள அந்த நிறுவன கிளை மேலாளர் கணேசனை கைது செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று தெரிவித்தனர். அவரிடம் வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்