ஏ.ஆர்.டி நிதி நிறுவன மோசடி வழக்கு - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்
|கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை,
அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஏ.ஆர்.டி ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 14ஆம் தேதி முதல் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ.ஆர்.டி ஜுவல்லரி பொதுமக்களிடம் இருந்து தங்கத்தில் முதலீடு மற்றும் அதிக வட்டி என்ற பெயரில் பணம் பெற்று, அதன் மூலமாக தமிழகத்தில் பல்வேறு கிளைகள் தொடங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கடைகளில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை ஏலம் விட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மோசடி செய்த பணத்தின் ஒரு பாதியை, உறவினர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக ஆல்வின் மற்றும் ராபின் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.