காஞ்சிபுரம்
வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல்துறை அகழாய்வு: அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு
|வடக்குப்பட்டு ஊராட்சியில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொண்டதில் அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர்.
இது குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிடத்த பானை ஓடு மற்றும் கற்கள் கி.மு. 300 முதல் கி.பி. 300-ம் ஆண்டு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியது என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த 3-ந்தேதி அகழாய்வு பணி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து மேற்பார்வையில் அகழ்வாய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால கட்டிட சுவர்கள் காணப்பட்டது. இதனை தொடர்ந்து அரியவகை பொருட்களான கண்ணாடி மணிகள், வட்ட சில்கள், இரும்பு பொருட்கள், கூர்மையான ஆயுதம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற பொருட்களை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து பார்வையிட்டார். அவருடன் தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
அகழ்வாய்வு பணி முழுமையாக முடிவடைந்தால்தான் என்னென்ன வகை பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.