< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொல்லியல்துறையினர் ஆய்வு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொல்லியல்துறையினர் ஆய்வு

தினத்தந்தி
|
8 July 2022 1:50 PM IST

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தொல்லியல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தெற்கு வாயிலில் உள்ள பெரிய ராஜ கோபுரமானது கி.பி.1509-ம் ஆண்டு விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது ராஜகோபுரங்கள் புனரமைக்கப்பட்டது.

12 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகமானது 16 ஆண்டுகள் ஆகியும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்திட ரூ.22 கோடி வரை ஒதுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

பழம்பெருமை வாய்ந்த இந்த கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக புனரமைப்பு பணி மேற்கொள்ள கோவில் செயல் அலுவலர் வேதமூர்த்தி முன்னிலையில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக கோவிலில் உள்ள பழமையான பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, கற்சிலைகள், கற்தூண்களை ஆய்வு செய்த அதிகாரிகள் பழமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்க்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தனர்.

குறிப்பாக தமிழக அரசு மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து மேற்கு ராஜகோபுரம் மட்டுமல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள இரட்டை திரு மாளிகை புனரமைப்பு பணிகளையும் மீண்டும் மேற்கொண்டு எதிர் வரும் கும்பாபிஷேகத்தில் இருந்து அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்