< Back
மாநில செய்திகள்
ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது

தினத்தந்தி
|
28 Sept 2023 6:33 PM IST

ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது.

வெள்ளப்பெருக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆறு என அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது. பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே உள்ள மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக சென்று வந்தன.

வாகன ஓட்டிகளின் நலன் கருதி தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் வழியாக தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

தரைப்பாலங்கள் மூழ்கின

இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அடுத்த அஞ்சாத்தம்மன் கோவில்- புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது. சுமார் ஒரு அடிக்கும் மேலாக இப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆபத்தை உணராமல் இந்தப் பாலத்தின் மீது பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வியாபாரிகள், தனியார் மற்றும் அரசு துறைக்கு வேலைக்கு செல்வோர் ஆபத்தை உணராமல் இந்தப் பாதையில் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்