திருவாரூர்
உழவு வயல்கள்
|உழவு வயல்கள்
கூத்தாநல்லூர் பகுதியில் சம்பா சாகுபடிக்கு உழவு செய்யப்பட்ட வயல்கள் காத்திருக்கின்றன. எனவே தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாழ்வாதாரமாக விவசாயம்
டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தையே பெரும்பாலும் தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டிலும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி முதல் போகமாக குறுவை நெற்பயிர் சாகுபடியையும், இரண்டாம் போகமாக சம்பா நெற்பயிர் சாகுபடியையும் செய்து வருகின்றனர்.
தடையில்லாமல் தண்ணீர் கிடைக்குமா?
நடப்பாண்டு சாகுபடி பணிகளை மேற்கொள்ள கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை நெற்பயிர் சாகுபடியை தொடங்கி செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதாலும், கர்நாடகம் காவிரி தண்ணீரை தர மறுப்பதாலும், குறுவை நெற்பயிர் சாகுபடியை முழுமையாக செய்து முடிப்பதற்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்குமா? என்ற கவலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.
உழவுசெய்யப்பட்ட வயல்கள்
இந்தநிலையில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் பல இடங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடியை மேற்கொள்ள உழவு செய்யப்பட்ட வயல்கள் காத்து கிடக்கின்றன.
உழவு செய்யப்பட்ட வயல்கள் தற்போது வரை சற்று ஈரப்பதம் கொண்ட நிலையில் இருக்க வேண்டும் என்றும், போதுமான மழை இல்லாமல் போனதால் உழவு செய்யப்பட்ட வயல்கள் கட்டாந்தரை போல காணப்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். எனவே குறுவை மற்றும் சம்பா சாகுபடியை முறையாக மேற்கொள்ள தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று கூத்தாநல்லூர் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.