அரியலூர்
மானியத்துடன் கூடிய திட்டங்களில் பயனடைய மீன் வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
|மானியத்துடன் கூடிய திட்டங்களில் பயனடைய மீன் வளர்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் வளர்ப்பு
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் ரூ.7 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய மீன்குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்தல் திட்டத்திற்கு ஒரு அலகும், ரூ.7 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு 3 அலகுகளும், ரூ.4 லட்சம் திட்ட மதிப்பீட்டில் நன்னீர் மீன் வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் திட்டத்திற்கு 3 அலகுகளும், ரூ.7.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பயோபிளாக் முறையில் மீன் வளர்த்தல் (சிறிய அளவில்) திட்டத்திற்கு 5 அலகுகளும், ரூ.3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு பண்ணை அமைத்தல் திட்டத்திற்கு 3 அலகுகளும் அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு திட்ட மதிப்பீட்டில் 40 சதவீதம் மானியமாகவும், மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவிற்கு 60 சதவீதம் மானியமாகவும், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
எனவே, மேற்கண்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் மீன் வளர்ப்பு விவசாயிகள் அரியலூரில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 31.8.2022-க்குள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர் அலுவலகம், அறை எண்.234, இரண்டாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிட வளாகம் என்ற முகவரியில் அளிக்கலாம்.
இந்த தகவல் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.