நீலகிரி
யானைகள் ஊருக்குள் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் பொருத்தம்
|கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும்போது முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகளை வனத்துறையினர் பொருத்தி வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும்போது முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகளை வனத்துறையினர் பொருத்தி வருகின்றனர்.
காட்டு யானைகள்
கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. யானைகள் பல்வேறு காரணங்களால் தேயிலை தோட்டங்கள் வழியாக ஊருக்குள் வருகின்றன. இந்த சமயத்தில் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களை காட்டு யானைகள் தாக்கி வருகிறது.
மேலும் வாழை, தென்னை மற்றும் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுதவிர அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிடுவதற்காக பொதுமக்களின் வீடுகளையும் உடைத்து வருகிறது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கருவிகள் பொருத்தம்
இதனால் இரவு, பகலாக வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து விடுகிறது. இதன் காரணமாக மனித-வனவிலங்கு மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலை தொடர்கிறது.
இந்தநிலையில் கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட ஓவேலி, கூடலூர், நாடுகாணி, பந்தலூர், சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் பகுதிகளில் முன்கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் (இயர்லி வார்னிங் சிஸ்டம்) பொருத்தும் பணியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை ஊருக்குள் வரும் முக்கிய வழித்தடங்களில் இந்த கருவிகள் பொருத்தப்படுகிறது. அவ்வாறு யானை வரும்போது சென்சார் மூலம் உறுதி செய்து, கருவியில் உள்ள அலாரம் ஒலிக்கும். மேலும் அதில் பொருத்தப்பட்டு உள்ள சிம்கார்டு மூலம் சம்பந்தப்பட்ட வனத்துறை, அந்த பகுதி பொதுமக்கள் குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உஷாராக இருக்க முடியும் என்றனர்.