< Back
மாநில செய்திகள்
சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
மாநில செய்திகள்

சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

தினத்தந்தி
|
23 Jan 2023 10:36 PM IST

சாதிய வன்மத்தோடு தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் வீடுகளுக்கு சென்ற (18.01.2023 அன்று) சாதிய ஆதிக்க சக்தியை சேர்ந்தவர்கள் மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளனர். கைகளில் தடி, கம்புகளுடன் அந்த பகுதிக்குள் புகுந்து குடிநீர் தொட்டி, குடிநீர் குழாய்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், சமையல் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இத்தகைய மோசமான தாக்குதலால் பல லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

இத்தாக்குதலில் முக்கிய அரசியல் பிரமுகரான சீனிவாசன் என்பவர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு பட்டியலின மக்களை தாக்கி சாதிய மோதலையும், பதற்றத்தையும் உருவாக்க முனைந்துள்ள அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதியின் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும். இத்தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சிலரின் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்திருப்பது மோசமான விளைவுகளையே உருவாக்கும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.

எனவே, மூங்கில்துறைபட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தனது முழுமையான வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும், தாக்குதலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுவதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டுமெனவும், தாக்குதலால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்துள்ள மக்களுக்கு சேதத்திற்கு ஈடான உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க முன்வர வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்