< Back
மாநில செய்திகள்
நெருங்கும் பொங்கல் பண்டிகை: குமரியில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
மாநில செய்திகள்

நெருங்கும் பொங்கல் பண்டிகை: குமரியில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
3 Jan 2023 10:16 AM IST

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் மண்பானை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்,

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அன்று சூரிய உதயத்துக்கு முன்பு எழுந்து வீட்டில் மாக்கோலமிட்டு புது மண்பானையில் பொங்கலிடுவது தமிழர்களின் மரபு.

ஆனால் தற்போதைய நவீன காலத்தில் பித்தளை மற்றும் சில்வர் பானைகளில் பொங்கலிடும் வழக்கம் மெல்ல மெல்ல தலை தூக்கி வருகிறது. இதையெல்லாம் தாண்டி சில இல்லத்தரசிகள் குக்கரிலேயே பொங்கல் வைத்துவிடுகிறார்கள். எனினும் மண்பானையில் பொங்கல் வைக்கும் கலாசாரம் இன்னமும் குறையவில்லை.

குறிப்பாக கிராமப்புறங்களை காட்டிலும் தற்போது நகர்புறங்களில் பெரும்பாலானோர் மண்பானையில் பொங்கல் வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே இருப்பதால் மண்பானை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குமரி மாவட்டத்தில் மண்பானை தயார் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் சுங்கான்கடை, தாழக்குடி, கண்டன்விளை, புலியூர்குறிச்சி, அருமனை, காப்புகாடு, புதுக்கடை உள்பட 17 இடங்களில் மண்பானை தொழில் நடக்கிறது. இதில் சுங்கான்கடையில் பெரிய அளவில் மண்பானை தொழில் உள்ளது. இங்கு சுமார் 180 குடும்பங்கள் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் மண்பானைகள் மற்றும் அடுப்புகள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இங்கு பொங்கல் பண்டிகைக்காக விதவிதமான மண்பானைகள் செய்யப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்துள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுபற்றி மண்பாண்ட தொழிலாளர் நல சங்க தலைவர் சுகுமாரனிடம் கேட்டபோது கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் 2 ஆயிரம் குடும்பங்கள் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தன.

ஆனால் தற்போது சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2,500 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் மண்பானைகளை செய்ய தொடங்கி விட்டோம். என்னிடம் தற்போது ஒரு லட்சம் மண்பானைகள் இருப்பு உள்ளன. எங்களிடம் 50 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் மண்பானைகள் கிடைக்கும். இதே போல பிற இடங்களிலும் மண்பானை செய்து வருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பு மண்பானை தொழில் நன்றாக இருந்தது.

அப்போது பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கான மண்பானைகள் விற்று தீர்ந்துவிடும். இதனாலேயே ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து நாங்கள் காத்திருப்போம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே தொழில் சரிவர நடப்பது இல்லை. தற்போது கொரோனா பாதிப்பு இல்லாததால் வழக்கம் போல விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனாலும் புதிதாக ஏதோ கொரோனா பரவ இருப்பதாக கூறி வருகிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும் மண்பானைகள் செய்வதை நாங்கள் நிறுத்தவில்லை. இந்த தொழிலில் மண் கிடைப்பதில் பிரச்சினை இருக்கிறது. இதனால் மண்பானை தொழில் நலிவடையும் நிலையில் உள்ளது. எனவே அதை மீட்டு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பரிசு தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறினால் மண்பானை தொழில் வளர்ச்சி அடையும். மேலும் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மழை கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் இருபருவ மழை பெய்வதால் ரூ.5 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்