10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா
|10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 1,761 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன.
சென்னை,
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல! அவை பெருமையின் அடையாளம் என்பதைத் தொடர்ந்து பறைசாற்றும் விதமாக இந்தக் கல்வியாண்டின் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடு முழுவதிலும், இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடைபெற்ற, மேல்நிலைப் பள்ளிகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளில் 12-ம் வகுப்பில் (பிளஸ் டூ) 94.56 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மட்டும் 91.02 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீதத் தேர்ச்சி விழுக்காட்டை எய்தி மாபெரும் சாதனைப் படைத்துள்ளன. மேலும், தமிழ்ப் பாடத்தில் மட்டும் 35 மாணவ மாணவியர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல உயர்நிலைப் பள்ளிகளுக்கான 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் மாநிலம் முழுவதும் 91.55 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர். இதில், அரசுப் பள்ளிகளில் மட்டும் 87.90 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 1,364 அரசு உயர்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுச் சிறந்துள்ளன. தமிழ்ப் பாடத்தில் மட்டும் 8 மாணவ மாணவியர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1,364 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 397 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என மொத்தம், 1,761 பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் இவ்வாண்டில் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன. பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் இது ஒரு மகத்தான சாதனையாகும்.
இத்தனை வெற்றிகளுக்கும் காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வி வளர்ச்சியில், கொண்டுள்ள பேரார்வமும் அக்கறையுமே ஆகும். குறிப்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவ மாணவியரின் முன்னேற்றத்திற்காகப் பள்ளிக் கல்வித்துறையில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், பேராசிரியர் க. அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம், மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளால் கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவியரின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் திட்டம், முதலான பல்வேறு மாணவர் மையத் திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்தி வெற்றிகள் படைத்து வருகிறது.
மேலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.5 சதவீத இடஒதுக்கீடுகளால் கடந்த ஆண்டில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 28,601 அரசுப் பள்ளி மாணவ மாணவியரின் கல்விக் கட்டணங்களை ஏற்றுப் பாராட்டியுள்ளார் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவியர்க்குப் பாராட்டு விழா
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டின் அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீதத் தேர்ச்சிகள் கண்டு சாதனை படைத்துள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும், தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவரையும் சென்னைக்கு அழைத்துப் பாராட்டும் வகையில் சீர்மீகு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் விரைவில் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.