100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
|100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்த தேர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தினர்.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சென்னைக்கு அழைத்து பாராட்டு விழா நடத்தப்படும் என்றும், தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி 5 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சாதனை படைத்த தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகள் முடிந்த பிறகு, ஜூன் மாதத்தில் இந்த விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுபோன்ற ஒரு விழா முதல் முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.