< Back
மாநில செய்திகள்
சனாதனம் சர்ச்சை விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் துணிச்சலை பாராட்டுகிறேன் - நடிகர் சத்யராஜ் பேட்டி
மாநில செய்திகள்

சனாதனம் சர்ச்சை விவகாரம்: உதயநிதி ஸ்டாலின் துணிச்சலை பாராட்டுகிறேன் - நடிகர் சத்யராஜ் பேட்டி

தினத்தந்தி
|
7 Sept 2023 1:47 PM IST

அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுக்க பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னையில் அண்மையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்திய அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது. தற்போது இந்திய அரசியல் வட்டாரம் முழுக்க பேசுபொருளாக மாறி இருப்பது சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தான்.

அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், மத்திய மந்திரிகள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு பதிலடி கொடுக்க பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே, சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு அயோத்தி சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு விலை வைத்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் சில இடங்களில் அந்த சாமியாரின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என 262 பேர் கடிதம் எழுதினர். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சனாதனம் ஒழியும் வரையில் எனது குரல் ஒலித்து கொண்டே இருக்கும் என மீண்டும் தனது கருத்தை உறுதிபட கூறியிருந்தார் அமைச்சர் உதயநிதி. இதனால், பல்வேறு வழக்குகள் , எதிர்ப்புகள் அமைச்சர் உதயநிதி மீது வந்து கொண்டு இருக்கிறது. சனாதனம் சர்ச்சை விவகாரத்தில் என் மீதான வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சனாதனம் தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்கு நடிகர் சத்யராஜ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசி உள்ளார்.

ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது. அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன் என்றார்.

முன்னதாக நடிகர் சத்யராஜை நேரில் சந்தித்து அவரது தாயார் நாதாம்பாள் மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்