ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!
|ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகள் வழங்கினார்.
சென்னை,
பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை, கலைவாணர் அரங்கத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 269 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா,பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் க. அறிவொளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.