143 காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
|143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 2-ம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு 143 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர்களுக்கு திருச்சி தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், சிறைகளில் ஒரு மாதகால உள்களப் பயிற்சியும் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம்
இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்ய ரூ.9.28 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை வங்கி விரைவாக கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க உதவும். பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காக்கவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும்.
சபாநாயகர் தொகுதி
சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் பிற நிதியிலிருந்து ரூ.6.86 கோடி செலவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 303 திறன் வகுப்பறைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
திறன் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளிலும், வெப் கேமரா வசதியும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான யுபிஎஸ் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. மேலும், இந்த வகுப்பறைகள் அனைத்தும் கம்ப்யூட்டர் சர்வர் மூலமாக மாவட்டக் கல்வி அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒரு இடத்தில் இருந்து பயிற்சி வகுப்புகளை கல்வி வல்லுனர்கள் நடத்தினால், திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் கற்க முடியும்.
கருணை ஆணைகள்
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 61 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் இருந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெகதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.