< Back
மாநில செய்திகள்
அறநிலையத்துறையில் 22 நபர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாநில செய்திகள்

அறநிலையத்துறையில் 22 நபர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தினத்தந்தி
|
18 Sept 2022 1:07 AM IST

இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப்பணியில் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை முறையாக பராமரித்தல், பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை செயல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயல் அலுவலரின் பணிகளில் தொய்வு ஏற்படாத வண்ணம், காலிப் பணியிடங்கள் அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது காலியாகவுள்ள 22 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்