< Back
மாநில செய்திகள்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
26 Dec 2023 5:51 AM IST

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மோகன் கடந்த 17-ந்தேதி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து பழனியப்பா, மவுரோகா பிரகாஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சென்னை,

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மோகன் கடந்த 17-ந்தேதி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து பழனியப்பா, மவுரோகா பிரகாஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக தேடுதல் குழுவில் பல்கலைக்கழகம் மானிய குழு (யு.ஜி.சி.,) பிரதிநிதி இடம்பெறவில்லை. இந்த சூழலில் துணைவேந்தராக மோகன் நியமிக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "யு.ஜி.சி. விதிகளின்படி துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு அமைக்கப்படவில்லை. எனவே, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் எஸ்.மோகனை நியமித்து இருப்பது செல்லாது. அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரம் டாக்டர் எஸ்.மோகன் இந்த பதவிக்கு தகுதியானவர் கிடையாது என்று நாங்கள் கூறவில்லை. வருகிற ஜனவரி 30-ந்தேதிக்குள் புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும். அதுவரை டாக்டர் எஸ்.மோகன் துணைவேந்தராக செயல்படலாம். புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி. விதிகளின்படி யு.ஜி.சி. பிரதிநிதியும் இடம்பெறும் வகையில் சட்ட திருத்தத்தை புதுச்சேரி அரசு கொண்டு வரவேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்