செங்கல்பட்டு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
|செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி சான்றுகளுடன், தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 6-ந் தேதியாகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.