திருச்சி
போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் நியமனம்; 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
|போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டனர். 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகரில் கண்டோன்மெண்ட், அரியமங்கலம், பாலக்கரை, கோட்டை, உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய 6 போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகள் இயங்கி வருகின்றன.இவற்றில் 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 125 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 279 பேர் பணியாற்றி வருகிறார்கள். போக்குவரத்து மேம்பாட்டிற்காக கூடுதலாக 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் அயல் பணியாக மாநகர ஆயுதப்படையில் இருந்து கண்டோன்மெண்ட் மற்றும் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகளுக்கு தலா ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக தற்போது போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகளில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டும் பணியில் உள்ள நிலையில், காலியாக உள்ள மேற்படி 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடத்துக்கும், தற்காலிகமாக காலியாக உள்ள ஒரு இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கும் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுகளில் பணிபுரியும் மூத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களை பணி நியமிக்கப்பட்டு, மாநகரில் சீரான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த 2 ஆண்டுகளாக மாநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாலும், சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாலும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதை கண்காணித்து அந்த இடங்களில் போக்குவரத்து போலீசாரை நியமித்து சம்பந்தப்பட்ட துறையினருடன் இணைந்து சரி செய்யப்பட்டு வருகிறது என மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.
இதேபோல் மாநகரில் அரியமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தயாளன் செசன்ஸ் கோர்ட்டு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், செசன்ஸ் கோர்ட்டு இன்ஸ்பெக்டர் சேரன் காத்திருப்போர் பட்டியலுக்கும் இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.