காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம் -தமிழக அரசு அறிவிப்பு
|காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு அறிவிப்பு.
சென்னை,
முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் வருகிற 25-ந்தேதி முதல் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்கு வரவேற்பு உள்ள நிலையில், இந்த திட்டத்தை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகள் நியமித்து, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
அதில், 'சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தினந்தோறும் கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவுத் திட்டம்) ஆகியோருக்கு ஏற்கனவே உள்ள பணிப்பொறுப்புகளுடன் காலை உணவுத்திட்டம் தொடர்பான கடமைகளையும், பொறுப்புகளையும் கூடுதலாக நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து பள்ளி, மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் உணவு வழங்கப்படுவதை கண்காணித்து, அறிக்கைகள் சமர்ப்பிக்கவேண்டும். காலை உணவுத்திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் காய்கறி மற்றும் உணவுப்பொருட்கள் உரியமுறையில் கொள்முதல் செய்யப்படுவதையும், தரமானதாக இருப்பதையும், உரிய அளவுகளில் அன்றைய நாளுக்குரிய உணவுகள் வழங்கப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். உணவு சமைக்கப்படும் இடம் மற்றும் வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்கவேண்டும். சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை தேவைப்படும்போது ஆய்வுக்குட்படுத்திட ஏதுவாக சத்துணவு திட்டத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும். சமையல் பாத்திரங்கள், உணவு பரிமாறும் தட்டுகள், டம்ளர் சுத்தமாக இருப்பதை கண்காணிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு பணிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.